Tamilவிளையாட்டு

ரகானே 4வது வரிசையில் விளையாட வேண்டும் – கவுதம் கம்பீர் யோசனை

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் முதல் டெஸ்டுக்கான இந்திய அணியில் பிரித்வி ஷா இருக்க வேண்டும் என்று விரும்பினேன். ஏனெனில் அவர் 4 டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம், 2 அரைசதம் அடித்திருந்தார். அதுவும் கடினமான நியூசிலாந்து தொடரில் ஒரு அரைசதம் எடுத்திருந்தார். அதனால் தொடரின் தொடக்கத்தில் அவர் அங்கம் வகித்தது நல்ல முடிவு தான். ஆனால் இப்போது அவர் பார்மில் இல்லை என்பதில் சந்தேகமில்லை. இதனால் அவரது நம்பிக்கையும் குறைந்து விட்டது. எனவே மெல்போர்னில் நடக்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக மயங்க் அகர்வாலுடன் இணைந்து சுப்மான் கில்லை பார்க்க ஆசைப்படுகிறேன். புஜாரா 3-வது வரிசையில் ஆடுவார்.

பேட்டிங்கில் 4-வது வரிசையில் அஜிங்யா ரகானே ஆட வேண்டும். அவர் தொடர்ந்து 5-வது வரிசையில் விளையாடுவதை பார்க்க விரும்பவில்லை. ஏனெனில் இப்போது அவர் பொறுப்பு கேப்டன். அணியை முன்னெடுத்து செல்ல வேண்டும். எனவே கோலி இடத்தில் ரகானே ஆட வேண்டும். 5-வது வரிசையில் லோகேஷ் ராகுல், அடுத்து ரிஷப் பண்ட், 7 மற்றும் 8-வது இடங்களில் ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் களம் காண வேண்டும். கடைசி 3 இடங்களில் வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பார்கள். இந்த டெஸ்டில் 5 பந்து வீச்சாளர்கள் இடம் பெற வேண்டும் என்பதே எனது விருப்பம் என தெரிவித்தார்.