ரகானே, புஜாராவை நீக்கியது நியாயமற்றது – முன்னாள் வீரர் ஜடேஜா கண்டனம்
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புஜாரா, ரகானே, இஷாந்த் சர்மா, விர்த்திமான் சஹா ஆகியோர் நீக்கப்பட்டனர்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் மோசமாக விளையாடியதற்காக ரகானேயையும், புஜாராவையும் தேர்வு குழு அதிரடியாக நீக்கியது. இந்த இருவரது நீக்கமும் எதிர்பார்த்ததுதான் என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில் புஜாரா, ரகானேவை நீக்கியது நியாயமற்றது என்று முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தேர்வு குழுவை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை இந்திய அணி இழந்தது. ஒருதொடரை இழந்ததற்காக புஜாராவையும், ரகானேவையும் நீக்கியதில் நியாயம் இல்லை. அவர்கள் நீக்கப்பட்டது வருத்தமாக இருக்கிறது.
1½ வருடத்திற்கு முன்பு அவர்கள் இருவராலும் இந்திய அணி உயர்ந்த நிலையில் இருந்தது. இந்த நீக்கத்தின் மூலம் அவர்களை நீங்கள் (தேர்வு குழுவினர்) தனிமைப்படுத்தி விட்டீர். இருவருமே டெஸ்டில் மட்டும்தான் விளையாடி வருகிறார்கள்.
ரகானேவும், புஜாராவும் 80 முதல் 90 டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளனர். போதுமான திறமைசாலிகள். அவர்கள் மீண்டும் அணிக்கு திரும்புவதற்கான வாய்ப்பு இல்லை. அடுத்த தலைமுறை வீரர்கள் இருப்பதால் அவர்களுக்கான வாய்ப்பு இனி கடினமே. இது எல்லா வீரர்களுக்கும் உள்ள நிலைமைதான்.
இவ்வாறு அஜய் ஜடேஜா கூறி உள்ளார்.
ரகானே கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஞ்சி டிராபி போட்டியில் சதம் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.