ரகளையில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் 30 பேர் கைது
அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ படம் தீபாவளியையொட்டி இன்று ரிலீசானாது. இதற்காக தமிழக முழுவதும் சிறப்பு காட்சி வெளியிட முதலில் தமிழக அரசு அனுமதி கொடுக்கவில்லை. பின்னர் நேற்று இரவு 10 மணியளவில் பிகில் படத்திற்கான சிறப்பு காட்சி வெளியிட தமிழக அரசு அனுமதி வழங்கியது. கிருஷ்ணகிரியில் உள்ள தியேட்டர்களில் பிகில் படத்திற்கான சிறப்பு காட்சி வெளியிட அறிவிப்பு வெளியானது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விஜய் ரசிகர்கள் ஏராளமானோர் நள்ளிரவு கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகே உள்ள தியேட்டர்கள் முன்பு குவிந்தனர். அவர்கள் அங்கு மேளதாளங்கள் முழங்க கொண்டாடத்துடன் நடனமாடினர். அதிகாலை 3 மணியளவில் பிகில் படத்திற்கான சிறப்பு காட்சி வெளியிட தாமதமானது. இதனால் ஆத்திரம் அடைந்த விஜய் ரசிகர்கள் 5 ரோடு ரவுண்டானா பகுதியில் கண்காணிப்பு மேடை, ஒலிப்பெருக்கிகள், சிக்னல்கள் மற்றும் சி.சி.டி.வி. கேமராக்கள் ஆகியவற்றை அடித்து நொறுக்கினர். மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த பேரிகார்டர்களையும் விஜய் ரசிகர்கள் அடித்து நொறுக்கினர்.
இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் நகராட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த சின்டெக்ஸ் டேங்கு குடிநீர் தொட்டியை பெயர்ந்து எடுத்து வந்து நடுரோட்டில் வைத்தனர். மேலும், அதிகாலை சாலையோர வியாபாரிகள் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த பழம், பூ, பானை போன்ற பொருட்களை விஜய் ரசிகர் ரோட்டில் தூக்கியெறிந்து தீவைத்து எரித்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதி முழுவதும் கலவர பூமியாக காட்சி அளித்தது.
விஜய் ரசிகர்கள் அதிகளவில் குவிந்திருந்ததாலும், குறைவான அளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாலும் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். இதைத்தொடர்ந்து உடனடியாக அதிவிரைவு போலீஸ் படையினர் அங்கு விரைந்து வந்து விஜய் ரசிகர்கள் மீது தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர்.
விஜய் ரசிகர்கள் நடத்திய இந்த கலவரத்தால் கிருஷ்ணகிரியில் உள்ள சாந்தி தியேட்டர் மற்றும் ராஜா தியேட்டர்கள் பகுதிகள் கலவர பகுதியாக காட்சியளித்தன. மேலும் வேறு ஏதாவது அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த கலவரத்திற்கு காரணமானவர்கள் யார்?யார்? என்று அந்த பகுதியில் உள்ள கடைகளில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை விஜய் ரசிகர்கள் 30 பேரை கைது செய்துள்ளனர்.