ஹமாஸ்- இஸ்ரேல் இடையிலான போர் இன்றுடன் 15-வது நாளை எட்டியுள்ளது. ஹமாஸ்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் எகிப்தில் இருந்து காசாவிற்கு செல்லும் ரஃபா பாதை மூடப்பட்டது.
இதன் காரணமாக சுமார் 24 லட்சம் பேர் உணவு மற்றும் மருத்துவ வசதியின்றி தவித்தனர். காசாவின் வடக்குப் பகுதியில் உள்ள மக்களை வெளியேறுமாறு வலியுறுத்திய இஸ்ரேல், தாக்குதலை தொடர்ந்த வண்ணம் இருந்ததால், உதவிப் பொருட்களை கொண்டு செல்ல முடியாத நிலை நீடித்தது.
இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சில தினங்களுக்கு முன் இஸ்ரேல் சென்றிருந்தார். அப்போது இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். காசா மக்களுக்கு உதவிப் பொருட்களை வழங்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதேபோல், எகிப்து அதிபரிடமும் இதுகுறித்து பேசினார். பின்னர், உதவிப் பொருட்களை கொண்டு செல்லும் வகையில் இஸ்ரேல் ரஃபா பாதையை அனுமதிக்கும் எனக் கூறியிருந்தார்.
ஆனால், ரஃபா பாதையில் உள்ள சாலைகள் சேதமடைந்ததால் எப்போது உதவிப் பொருட்கள் செல்லும் என அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது எகிப்தில் இருந்து காசாவிற்கு உதவிப் பொருட்களுடன் கனரக வாகனங்கள் ரஃபா பாதை வழியாக சென்று காசாவை அடைந்துள்ளன. இதன்மூலம் பரிதவித்து வரும் காசா மக்களுக்கு உதவிப் பொருட்கள் வினியோகிக்கப்பட இருக்கிறது.