‘தாதா’ என்ற பெயரில் தயாராகி உள்ள படத்தில் யோகிபாபு, நிதின் சத்யா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். நாயகியாக காயத்ரி மற்றும் நாசர், மனோபாலா, சிங்கமுத்து, புவனேஸ்வரி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி கின்னஸ் கிஷோர் தயாரித்து இயக்கி உள்ளார். தாதா படத்தில் நான் கதாநாயகன் இல்லை என்று யோகிபாபு சமீபத்தில் மறுப்பு வெளியிட்டார்.
இதுகுறித்து தாதா படத்தின் தயாரிப்பாளர் கின்னஸ் கிஷோர் பட விழாவில் பேசும்போது, ”யோகிபாபுவுக்கு எவ்வளவோ உதவி செய்திருக்கிறேன். அந்த நன்றிகூட இல்லாமல் நடந்துகொள்கிறார். இந்தப் படத்தில் யோகிபாபு 4 சீனில் நடித்திருந்தால் நான் சினிமாவை விட்டே போய்விடுகிறேன். அதுவே 40 சீன்களுக்கு மேல் நடித்திருந்தால் அவர் சினிமாவை விட்டு போய்விடுவாரா?
தாதா படத்தை வாங்காதீர்கள் என்று பலருக்கு போன் செய்து தடுக்கிறார். எனக்கு இன்னொரு படம் நடித்து தருவதாக பணம் வாங்கி கொண்டு நடிக்கவும் முன்வரவில்லை, பணத்தையும் திருப்பி தரவில்லை. எனக்கு படம் நடித்துக் கொடுக்காதவரை வேறு எந்தப் படத்திலும் நடிக்கக்கூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளேன். விரைவில் இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள்” என்றார்.