யோகி பாபுக்கு ஜோடியாகும் யாஷிகா ஆனந்த்!
‘மோ’ என்ற படம் மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் புவன் நல்லான். ஹாரர், காமெடி கதையுடன் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவர் அடுத்ததாக ‘ஜாம்பி’ என்ற புதிய படத்தை இயக்க இருக்கிறார். ‘எஸ்3’ பிக்சரஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம், வி.முத்துக்குமார் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள்.
இப்படம் குறித்து இயக்குனர் புவன் நல்லான் கூறும்போது, ‘கதாநாயகன், நாயகி என்றில்லாமல் இந்த படத்தில் கதை தான் நாயகனும்.. நாயகியும்.. வில்லனும். ஒரே இரவில் நடக்கும் ஹாரர் – காமெடியான இப்படத்தில் யோகி பாபு, பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் இருவரும் பரபரப்பான கேரக்டர்களில் நடிக்கிறார்கள். யூடியூப் புகழ் கோபி சுதாகர் இப்படம் மூலம் அறிமுகமாகிறார்.
ஆஸ்கர் அவார்ட் படமான “லைப் ஆப் பை” படத்தில் நடித்த டி.எம்.கார்த்திக் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மேலும் மனோபாலா, “கோலமாவு கோகிலா” அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், லொள்ளு சபா மனோகர், “மியூசிக்கலி” புகழ் சித்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அவரவர் பாணியில் வெவ்வேறு தளங்களில் காமெடிகளில் கலக்கி வரும் இவர்களை இப்படம் மூலம் இணைத்ததில் பெருமை கொள்கிறேன்’ என்றார்.
வெங்கட் பிரபுவின் “பார்ட்டி” படத்திற்கு பிறகு பிரேம்ஜி இப்படத்திற்கு இசை அமைக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார். விக்ரம் மோகன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் படப்பிடிப்பை, வருகிற டிசம்பர் 13-ம் தேதி சென்னையில் படப்பிடிப்பு ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற இருக்கிறது.