யெஸ் வங்கியில் ரூ.545 கோடி டெபாசிட் செய்த பூரிஜெகநாதர் ஆலயம் – பக்தர்கள் கவலை
தனியார் வங்கியான யெஸ் வங்கி நிதி நெருக்கடியில் தத்தளிக்கிறது. நிதி நிலைமை மோசமாகி இருப்பதால், அந்த வங்கியின் இயக்குனர்கள் குழுவின் செயல்பாடுகளை பாரத ரிசர்வ் வங்கி ஒரு மாத காலத்துக்கு நிறுத்தி வைத்துள்ளது. ஒரு வாடிக்கையாளர் ரூ.50 ஆயிரம் மட்டுமே திரும்ப எடுக்க வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த வங்கியில்தான், நாட்டின் புகழ்பெற்ற ஒடிசா மாநிலம், பூரி ஜெகநாதர் கோவில் பணம் ரூ.545 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இது இப்போது பக்தர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இதையொட்டி அந்த கோவிலின் மூத்த தைத்யபதி (சேவகர்) விநாயக்தாஸ் மோஹோபத்ரா கூறுகையில், “ஒரு தனியார் வங்கியில் ஏதோ கொஞ்சம் கூடுதல் வட்டி தருகிறார்கள் என்பதற்காக இவ்வளவு பெரிய தொகையை டெபாசிட் செய்ய காரணமானவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
ஜெகநாத் சேனா ஒருங்கிணைப்பாளர் பிரியதர்ஷி பட்நாயக் கருத்து தெரிவிக்கையில், “தெய்வத்தின் பணத்தை ஒரு தனியார் வங்கியில் டெபாசிட் செய்தது சட்ட விரோதம், நெறிமுறைக்கு மாறானது. இதற்கு கோவில் நிர்வாகத்தையும், நிர்வாக குழுவையும் பொறுப்பேற்க வைக்க வேண்டும்” என்று கூறினார்.
பூரி ஜெகநாதர் கோவில் சார்பில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை பாதுகாப்பாக இருப்பதாக சட்டத்துறை மந்திரி பிரதாப் ஜேனா கூறியுள்ளார்.
‘ரூ.545 கோடி ரூபாய்க்கான இரண்டு நிலையான டெபாசிட்டுகள் மார்ச் 16 மற்றும் மார்ச் 29 ஆகிய தேதிகளில் முதிர்ச்சியடையும். அதன் பின்னர் டெண்டர் நடைமுறை மூலம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அந்த தொகை டெபாசிட் செய்யப்படும்’ என அவர் கூறினார்.