ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் பங்கேற்ற “யூரோ” கோப்பை கால்பந்து போட்டி கடந்த 11-ந் தேதி தொடங்கியது. 24 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில் நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தன.
“எப்” பிரிவில் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு புடாபெஸ்டில் நடந்த ஆட்டத்தில் பிரான்ஸ்- போர்ச்சுக்கல் அணிகள் மோதின. இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.
போர்ச்சுக்கல் அணியில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெனால்டி மூலம் 2 கோல்களை (31 மற்றும் 60-வது நிமிடம்) அடித்தார். பிரான்ஸ் அணிக்காக கரீம் பென்சிமா இரண்டு கோல்களை (45-வது நிமிடம் பெனால்டி மற்றும் 47-வது நிமிடம்) அடித்தார்.
ஜெர்மனி-அங்கேரி அணிகள் முனிச் நகரில் மோதிய மற்றொரு ஆட்டமும் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. ஜெர்மனி அணியில் ஹாவர்ட்சும் (66-வது நிமிடம்), கோரட்ஸ்காவும் (84) அங்கேரி அணியில் ஆடம் சலாயும் (11-வது நிமிடம்), ஸ்காபரும்(68) கோல் அடித்தனர்.
“எப்” பிரிவில் 5 புள்ளிகளுடன் பிரான்ஸ் முதல் இடத்தை பிடித்து 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணி ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றது. 2 போட்டியில் டிரா செய்தது.
ஜெர்மனி, போர்ச்சுக்கல் ஒரு வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வியுடன் தலா 4 புள்ளிகள் பெற்றுள்ளன. கோல்கள் அடிப்படையில் ஜெர்மனி 2-வது இடத்தை பிடித்து நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
போர்ச்சுகல் அணி 3-வது இடத்தை பிடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறியது. ஒவ்வொரு பிரிவிலும் 3-வது இடத்தை பிடிக்கும் 4 சிறந்த அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். இதில் போர்ச்சுகல் முதல் இடத்தை பிடித்தது.
‘இ’ பிரிவில் நடந்த ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 5-0 என்ற கோல் கணக்கில் சுலோவாகியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் சுவீடன் 3-2 என்ற கணக்கில் போலந்தை வீழ்த்தியது.
இந்த பிரிவில் சுவீடன் முதல் இடத்தையும் ஸ்பெயின் 2-வது இடத்தையும் பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
2-வது சுற்றில் நுழைந்த நாடுகள் வருமாறு:-
இத்தாலி, வேல்ஸ், சுவிட்சர்லாந்து (‘ஏ’ பிரிவு), பெல்ஜியம், டென்மார்க் (‘பி’ பிரிவு ), நெதர்லாந்து, ஆஸ்திரியா, உக்ரைன் (‘சி’ பிரிவு ), இங்கிலாந்து, குரோஷியா, செக்குடியரசு (‘டி’ பிரிவு) சுவீடன், ஸ்பெயின் (‘இ’ பிரிவு), பிரான்ஸ், ஜெர்மனி, போர்ச்சுக்கல் (‘எப்’ பிரிவு).
துருக்கி, பின்லாந்து, ரஷியா, வடமாசிடோனியா, ஸ்காட்லாந்து, சுலோவாகியா, போலந்து, அங்கேரி ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.
நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் 26-ந் தேதி தொடங்குகிறது.