Tamilவிளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து – உக்ரைன், இங்கிலாந்து அணிகள் காலியிறுதிக்கு முன்னேற்றம்

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் லண்டனில் நேற்று நடந்த 2-வது சுற்றில் முன்னாள் சாம்பியன் ஜெர்மனி அணி, இங்கிலாந்தை எதிர்கொண்டது.

பரம எதிரிகள் மோதிய இந்த ஆட்டத்தில் இரு அணியினரும் நீயா-நானா என்று வரிந்து கட்டி நின்றனர். கோல் கம்பத்தை நெருங்குவதும் பிறகு நழுவ விடுவதுமாக ஆட்டத்தின் முதல் பாதி சென்றது.

இரண்டாவது பாதியில் உள்ளூர் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் ஆக்ரோஷமாக செயல்பட்ட இங்கிலாந்து அணியினர், ஜெர்மனியின் தடுப்பு கோட்டையை தகர்த்தனர்.

75-வது நிமிடத்தில் சக வீரர் தட்டிக் கொடுத்த பந்தை இங்கிலாந்தின் ரஹீம் ஸ்டெர்லிங் கோலுக்குள் தள்ளிவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்தார்.

ஜெர்மனி வீரர்கள் சுதாரித்து மீள்வதற்குள் 86-வது நிமிடத்தில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் தலையால் முட்டி கோல் அடித்து எதிரணியை முற்றிலும் நிலைகுலைய வைத்தார்.

இறுதியில், இங்கிலாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது.

இன்று அதிகாலை நடந்த மற்றொரு போட்டியில் ஸ்வீடன், உக்ரைன் அணிகள் மோதின. முதல் பாதியின் 27வது நிமிடத்தில் உக்ரைன் அணி ஒரு கோல் அடித்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 43வது நிமிடத்தில் ஸ்வீடன் அணி ஒரு கோல் அடித்தது. இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை என்பதால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அப்போதும் எந்த அணியும் கோல் போடவில்லை.

இதையடுத்து, கூடுதலாக 5 நிமிடம் அளிக்கப்பட்டது. ஆட்டத்தின் 121வது நிமிடத்தில் உக்ரைன் அணி மற்றொரு கோலை அடித்தது.

இறுதியில், உக்ரைன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்வீடனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.