யுவராஜ் சிங் பாணியில் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் அடித்த பாகிஸ்தான் வீரர்

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் கண்காட்சி போட்டி நேற்று குவெட்டாவில் உள்ள புக்டி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பெஷாவர் ஜால்மி மற்றும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற பெஷாவர் அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய குவெட்டா கிளாடியேட்டர்ஸ் 20 ஓவர் முடிவில் 184 ரன்கள் எடுத்தது.

குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் பேட்ஸ்மேன் இப்திகார் அகமது, பெஷாவர் அணியை சேர்ந்த வஹாப் ரியாஸ் பந்துவீச்சில் கடைசி ஓவரில், யுவராஜி சிங் பாணியில், 6 பந்துகளில் 6 சிக்சர்கள் பறக்க விட்டார். இறுதியில் இப்திகார் 50 பந்துகளில் 94 ரன்கள் குவித்தார். அவர் சிக்சர் அடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்ந்து களமிறங்கிய பாபர் அசாமின் பெஷாவர் அணி 20 ஓவரில் 181 ரன்கள் எடுத்தது. இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் சர்பராஸ் அஹமதுவின் கிளாடியேட்டர்ஸ் அணி வெற்றி பெற்றது. முன்னதாக, 2007 ஆம் ஆண்டில், தென் ஆப்பிரிக்காவின் ஹெர்ஷல் கிப்ஸ், சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் ஆறு சிக்சர்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். அவர் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்தின் டான் வான் பங்கேவின் ஓவரில் 6 பந்துகளிலும் சிக்சர் விளாசினார். அதே ஆண்டில், இந்தியாவின் யுவராஜ் சிங், டி20 போட்டிகளில் ஒரு ஓவரில் ஆறு சிக்சர்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். அவர், 2007 ஆம் ஆண்டு முதல் டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட்டின் ஓவரில் அடுத்தடுத்து 6 சிக்சர்கள் விளாசி 36 ரன்கள் எடுத்தார்.

இதேபோல், முதல் தர கிரிக்கெட்டில், ஒரு ஓவரில் 6 சிக்சர்களை அடித்த சாதனையைப் படைத்த முதல் இந்திய வீரர் ரவி சாஸ்திரி ஆவார். அவர் 1984-85 ரஞ்சிக் கோப்பை தொடரில் பரோடாவுக்கு எதிராக இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்தினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools