யுவராஜ் சிங் எழுதிய கடிதத்துக்கு விராட் கோலி பதில்
இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு முன்னாள் வீரரான யுவராஜ்சிங் உருக்கமான கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய விராட் கோலிக்கு கடிதத்துடன் பரிசு ஒன்றையும் அனுப்பி இருந்தார்.
அந்த கடிதத்தில், ‘மிகப்பெரிய கேப்டனாகவும், தலைவனாகவும் இருக்கிறாய். தற்போது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை நீங்கள் தொடங்கியுள்ளது என்னை மேலும் உற்சாகப்படுத்தி உள்ளது. இனி உங்களிடம் இருந்து வழக்கமான ரன் சேசை எதிர்பார்க்கிறேன்.
நீ ஒரு சூப்பர் ஸ்டார். உனக்குள் இருக்கும் நெருப்பு தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கட்டும். நாட்டை தொடர்ந்து பெருமைப்படுத்து’ என்று உருக்கமாக கூறி இருந்தார். மேலும் கோல்டன் ‘ஷூ’ ஒன்றையும் பரிசாக அனுப்பி இருந்தார்.
யுவராஜ் சிங் அனுப்பி உருக்கமான கடிதத்துக்கு விராட் கோலி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
உங்களின் இந்த அற்புதமான கடிதத்துக்கு நன்றி. எனது கிரிக்கெட் பயணத்தில் முதல் நாளில் இருந்து பார்த்த ஒருவரிடம் இருந்து இந்த கடிதம் வந்திருக்கிறது. உங்கள் வாழ்க்கையும், நீங்கள் புற்று நோயில் இருந்து மீண்டு வந்ததும், கிரிக்கெட் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் உத்வேகமாக இருந்தது.
நீங்கள் யார் என்பதை நான் அறிந்திருக்கிறேன். நீங்கள் எப்போதும் உங்களை சுற்றி இருப்பவர்களுக்காக மிகவும் தாராளமாகவும், அக்கறையுடனும் இருப்பீர்கள். இப்போது நாம் இருவரும் பெற்றோர்கள். அது என்ன ஒரு ஆசீர்வாதம் என்பதை அறிவோம். இந்த புதிய பயணத்தில் அனைத்து மகிழ்ச்சி, அழகான நினைவுகள் மற்றும் ஆசீர்வாதங்களை விரும்புகிறேன். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக’ என்று தெரிவித்துள்ளார்.