‘2.0’ படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம், ‘பேட்ட’. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா, பாபி சிம்ஹா, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், சிம்ரன், மேகா ஆகாஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.
சிம்லா, டார்ஜிலிங், உத்தரப்பிரதேசம் என வட மாநிலங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது. படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது.
ரஜினிகாந்துக்கு நேற்று 69 ஆவது பிறந்தநாள். ரஜினியின் பிறந்தநாள் பரிசாக ‘பேட்ட’ படத்தின் டீசர் யூடியூப்பில் வெளியானது. ரஜினிக்கே உரிய தனி ஸ்டைலில் அவர் நடந்து வரும் காட்சிகள் டீசரில் இடம்பெற்றுள்ளன.
ரஜினியின் இரண்டு வேறுபட்ட கெட்டப்களுடன் வெளியாகியுள்ள ‘பேட்ட’ டீசர் 1.32 நிமிடங்கள் ஓடுகிறது. டீசரில் ரஜினியின் ஸ்டைலும் அனிரூத்தின் தெறிக்கவிடும் பின்னணி இசையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.
மிகவும் இளமையாக, தன்னுடைய துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் ரஜினிகாந்த். நேற்று காலை 11 மணிக்கு வெளியான ‘பேட்ட’ டீசர் ரிலீசான 5 நிமிடத்தில் தன்னுடைய சாதனையை தொடங்கி விட்டது.
20 நிமிடங்களிலேயே 5 லட்சம் பார்வையாளர்களை கடந்த டீசர் அதே வேகத்தில் 40 நிமிடங்களிலேயே 10 லட்சம் பார்வையாளர்களை பெற்றது. 24 மணி நேரத்தில் 70 லட்சம் பார்வையாளர்களை பெற்று யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடத்திலேயே இருந்து வருகிறது.
பேட்ட படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் அனிருத் இருவரும் மாறிமாறி தங்களை ரஜினியின் ரசிகன் மட்டும் அல்ல ரஜினியின் வெறியன் என்று அடையாளப்படுத்தி கொண்டனர்.
எனவே முழுக்க ரஜினி ரசிகர்களால் ரஜினி ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட படமாக ‘பேட்ட’ படம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதை தற்போது வெளியாகியுள்ள டீசர் உறுதிப்படுத்தியுள்ளது.
முழுக்க ரஜினியின் மாஸ் காட்சிகளின் சில காட்சிகளை ஒருங்கிணைத்து டீசரை வடிவமைத்துள்ளனர். ரஜினியின் பஞ்ச் வசனம் உள்ளிட்ட எந்த வசனமும் டீசரில் இல்லை.
டீசரின் முடிவில் ரஜினியின் வழக்கமான ஸ்டைல் சிரிப்பும் மரண மாஸ் பாடலின் சில வரிகளும் இடம் பெற்றுள்ளன. ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு டீசரை வெளியிட்டுள்ளதால் டீசர் முழுக்க ரஜினி மட்டுமே உள்ளார். வேறு எந்த கதாபாத்திரமும் காட்டப்படவில்லை.
விரைவில் படத்தின் டிரெய்லரை வெளியிடுவதாகப் படக்குழு அறிவித்துள்ளது.