X

யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை, திட்டமிட்டபடி ஊர்வலத்தை நடத்துவோம் – ஆர்.எஸ்.எஸ் அறிவிப்பு

தமிழகத்தில் காந்தி ஜெயந்தி தினத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலமும், விடுதலை சிறுத்தைகள் சார்பில் மத நல்லிணக்க மனித சங்கிலி நிகழ்ச்சிக்கும் அனுமதி கோரப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். சார்பில் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க உத்தரவிடப்பட்டது.

ஆனால் பி.எப்.ஐ. தடை செய்யப்பட்டிருப்பதால் அசாதாரண சூழல் நிலவுவதாக கூறி தமிழக அரசு இரு நிகழ்ச்சிகளுக்குமே தடை விதித்தது. ஆர்.எஸ்.எஸ். தரப்பில் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில் அடுத்த மாதம் (நவம்பர்) 6-ந்தேதி ஊர்வலம் நடத்தவும் அதற்கான அனுமதியை இந்த மாதம் 30-ந்தேதிக்குள் வழங்கவும் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகளின் மனித சங்கிலி அக்டோபர் 11 ஆம் தேதி நடத்தப்பட்டது. அப்போது பேசிய திருமாவளவன் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதிக்க மாட்டோம் என்றார்.

இதுபற்றி ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் கூறும்போது, யார் என்ன சொன்னாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்களுக்கு கோர்ட்டு அனுமதித்துள்ளது. எனவே திட்டமிட்டபடி அணிவகுப்பு நடைபெறும் என்றனர். தமிழகம் முழுவதும் 50 இடங்களில் அணிவகுப்பு நடத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டுள்ளது. அந்த இடங்களில் ஊர்வலம் செல்லும் பாதை, கடக்க வேண்டிய நேரம் ஆகியவற்றை பார்வையிட்டு முன்னேற்பாடுகளை செய்து வருகிறார்கள்.