மோடி பிரதமர் பதவியில் இருப்பது இந்த நாட்டின் சாபக்கேடு – வைகோ காட்டம்
இலக்கியப்பீடம் மாத இதழ் ஆசிரியராக இருந்த மறைந்த விக்கிரமனின் 3-ம் ஆண்டு நினைவு விழா, இலக்கியப்பீடம் மாத இதழ் மற்றும் அனைத்து இந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் சென்னை தியாகராயநகரில் உள்ள வாணி மகாலில் நேற்று நடைபெற்றது. விழாவில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கவிஞர் ரமணனுக்கு, எழுத்தாளர் சிவசங்கரி வழங்கும் இலக்கியப்பீடம்-சிவசங்கரி விருது மற்றும் ரூ.10 ஆயிரத்துக்கான பொற்கிழி ஆகியவற்றை வழங்கினார்.
மேலும், எழுத்தாளர் ஆர்.சூடாமணி சார்பில், ‘மஞ்சள் நதி மீன்கள்’ என்ற நாவலுக்காக அமரர் ரங்கநாயகி அம்மாள் நினைவாக சிறந்த நாவலுக்கான சிறப்பு பரிசாக ரூ.5 ஆயிரத்துக்கான பொற்கிழியை, எழுத்தாளர் மதுராவுக்கு வழங்கினார். இதுதவிர, இலக்கியப்பீடம்-மாம்பலம் சந்திரசேகர் இணைந்து நடத்திய கட்டுரை போட்டியில் வெற்றிபெற்ற 12 எழுத்தாளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் மற்றும் சான்றிதழ்களையும் வைகோ வழங்கினார்.
மேலும், ‘இலக்கியப்பீடம் பரிசு பெற்ற நாவல்கள்’, ‘இலக்கியப்பீடம் பரிசு பெற்ற கட்டுரைகள்’ என்ற புத்தகங்களின் முதல் பிரதியை வைகோ வெளியிட எழுத்தாளர் மெய்.ரூஸ்வெல்ட் பெற்றுக் கொண்டார்.
இந்த விழாவில் பேராசிரியர் ராம.குருநாதன், எழுத்தாளர் மாம்பலம் ஆ.சந்திரசேகர், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்க தலைவர் கோ.பெரியண்ணன், இலக்கியப்பீடம் ஆசிரியர் கண்ணன் விக்கிரமன் (விக்கிரமனின் மகன்), விக்கிரமனின் மனைவி ராஜலட்சுமி, மகள்கள் உமாதேவி, ஹேமமாலினி, ஜெயந்தி மற்றும் எழுத்தாளர் சிவசங்கரி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழா முடிவில் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:
நாட்டின் 90 கோடி விவசாயிகளின் பிரதிநிதிகளாக லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி உள்ளனர். 4 மாத காலமாக சாலையில், வெயிலிலும், மழையிலும், பனியிலும் கிடந்த விவசாயிகளை பார்க்க 5 நிமிடம் ஒதுக்காத பொறுப்பற்ற ஒரு பிரதமர் பதவியில் இருப்பது இந்த நாட்டின் சாபக்கேடு என்று நினைக்கிறேன்.
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தென்னங்கன்றுகள் கொடுக்க வேண்டும் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் மட்டும் பொறுப்பாக கூறி உள்ளார். மக்கள் நிலைமையை உணர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திரமோடி தமிழகத்தில் கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட வரவில்லை. பிரதமருக்கு விதவிதமாக உடை அணிவது, தினம் ஒரு நாட்டிற்கு போவது என்ற 2 போதைகள் உள்ளன. இதில் இருந்து நரேந்திர மோடி ஒரு காலமும் வெளியில் வரமுடியாது. அவரிடம் இருந்து பதவியையும், அதிகாரத்தையும் மக்கள் பறிக்க வேண்டும்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி இல்லாமல் நியூட்ரினோ திட்டத்தை தொடங்கக்கூடாது என்று 3 ஆண்டுகள் தடை வாங்கி வைத்துள்ளேன். இந்தநிலையில், மத்திய அரசின் திட்டங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் அனுமதி அளித்துவிட்டால் எந்த மாநில அரசுகளையும் கேட்க வேண்டியது இல்லை என்று கூறப்படுகிறது.
இதேபோன்று மாநிலங்களில் உள்ள அணைகளில் அந்தந்த மாநிலங்களுக்கு தான் அதிகாரம் உண்டு என்ற அணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற போகிறார்கள். இதனை தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.