மோடி படம் குறித்து தணிக்கை ஆணையத்திடம் தேர்தல் ஆணையம் கேள்வி!

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘பி.எம்.நரேந்திரமோடி’ என்ற பெயரில் திரைப்படம் தயாராகி உள்ளது. இதில் மோடியின் கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எதிர்ப்பு மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக படத்தை வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் இந்த படத்திற்கு தடை விதிக்கக் கோரி டெல்லி, மும்பை ஐகோர்ட்டுகளில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடியாகின. சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கும் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் இன்னும் சான்றிதழ் வழங்காததால், படத்தை வெளியிடுவது குறித்து நீதிபதிகள் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. படம் வெளியாவது விதிமீறலா என்பதை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இதையடுத்து, தேர்தல் ஆணையம் உடனடியாக மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திற்கு ஒரு கடிதம் எழுதியது. அதில், பிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவை தெரிவிக்கும்படி கூறியுள்ளது. தணிக்கை வாரியம் அளிக்கும் தகவலின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்.

பாராளுமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நாளான ஏப்ரல் 11ம் தேதி (நாளை) படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools