மோடி அலையால் மட்டும் பா.ஜ.க ஜெயிக்கவில்லை – முன்னாள் கர்நாடக முதலமைச்சர்

கர்நாடக மாநில முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான எடியூரப்பா கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும் போது கூறியதாவது:-

கர்நாடகாவில் நடக்கும் இடைத்தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும். மோடியின் பெயரை சொல்லி வெற்றி பெற்று விடலாம் என்ற மாயநிலையில் நாம் இருக்கக்கூடாது.

கர்நாடகாவை பொறுத்த வரை கடந்த தேர்தலிலும் கூட நாம் நமது சேவைகளை சொல்லி வெற்றி பெற்றோம். மோடி அலையால் மட்டுமே நாம் வெற்றி பெற்றுவிடவில்லை. இதை ஒவ்வொரு தொண்டர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

எந்த ஒரு ஆதரவு அலையையும் தொண்டர்கள் எதிர்பார்த்து காத்திருக்கக்கூடாது. மக்களிடம் செல்லுங்கள். அவர்களிடம் பாரதிய ஜனதா செய்துள்ள சாதனைகளை சொல்லி ஓட்டு கேளுங்கள்.

அதுதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். நாம் தேர்தலில் தோல்வி அடைந்தால் அது தரும் தகவல் என்ன என்பதை அறிய வேண்டும். எனவே ஏதாவது ஒரு அலையை நம்பி எளிதாக வென்று விடலாம் என்று நினைக்காதீர்கள்.

கர்நாடகாவில் எதிர்க்கட்சிகள் வலிமை பெற்று இருக்கின்றன. நாம் அதற்கு இடம் கொடுத்து விடக்கூடாது. அடுத்த 2 ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் பா.ஜனதா ஆட்சியை மலரச் செய்ய வேண்டும்.

பிரதமர் மோடி பாரதிய ஜனதாவை வலிமைப்படுத்தி இருக்கிறார். 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அவரது தலைமையில் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சியை அமைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

அவர் மோடியை மறைமுகமாக பேசி தாக்கி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools