பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் மே மாதம் 19-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
வருகிற 26-ந்தேதி பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது பற்றி பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரியங்கா மிகவும் கடுமையாக உழைக்கக் கூடிய பெண் மணி. அவரை மாற்றத்தின் சக்தியாக பொதுமக்கள் பார்க்கிறார்கள். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் அவரை சிரித்த முகத்துடன் வரவேற்கிறார்கள்.
பிரியங்காவை வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து களம் இறக்கலாமா? என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. உண்மையில் மோடியை எதிர்த்து போட்டியிடுவதற்கு பிரியங்கா மிக சிறந்த வேட்பாளராக இருப்பார்.
வாரணாசி தொகுதியில் பிரியங்கா போட்டியிடும் பட்சத்தில் மோடிக்கு கடும் சிக்கல்கள் ஏற்படும். முடிவு எங்களுக்கு சாதகமாக அமையும்.
நாடு முழுவதும் மோடி மீது மிக கோபத்தில் இருக்கிறார்கள். மக்கள் மாற்றத்தை வேண்டும் என்று விரும்புகிறார்கள். அந்த மாற்றத்தை ராகுல்- பிரியங்காவால் கொடுக்க முடியும். எனவே வாரணாசி தொகுதியில் பிரியங்கா போட்டியிட்டால் அவர் மிக பெரும் சாவலாக இருப்பார்.
வாரணாசி மக்களும் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் அதிருப்தியுடன் இருக்கிறார்கள். மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு பிரியங்கா நம்பிக்கை ஒளியாக வந்துள்ளார்.
இந்த நாட்டை ராகுல் வழி நடத்துவார். அவருக்கு துணையாக நானும், பிரியங்காவும் இருப்போம். மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். மே 23-ந் தேதி இதற்கெல்லாம் விடை கிடைக்கும்.
நிச்சயமாக இந்த தேர்தலால் நாட்டில் மாற்றம் வரும். தேர்தல் முடிவு வரும்போது நீங்கள் அதை பார்க்கத்தான் போகிறீர்கள்.
இவ்வாறு ராபர்ட் வதேரா கூறினார்.