மோடியின் கன்னியாகுமரி நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்க கூடாது – செல்வப்பெருந்தகை பதிவு
பிரதமர் நரேந்திர மோடி வருகிற மே 30 ஆம் தேதி மாலை கன்னியாகுமரி வர உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், பிரதமரின் வருகை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகிறது.
மே 30 ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய இருக்கிறார். விவேகானந்தர் தியானம் செய்த இடத்திலேயே பிரதமர் மோடி தியானம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக 2019 பாராளுமன்ற தேர்தலின் போது கடைசிக்கட்ட வாக்குப்பதிவின் போது பிரதமர் மோடி இமய மலை பயணம் செய்தார். அங்குள்ள குகை ஒன்றுக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு தியானம் செய்தார். இந்த பயணத்தின் போது கேதார்நாத் சிவன் கோவிலில் வழிபாடு செய்தார்.
இந்நிலையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் மோடியின் கன்னியாகுமரி நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கக் கூடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும அதில், “வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணிநேர அமைதிக் காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியின் மூலம் ஊடகங்கள் வாயிலாக மோடி அவர்கள் மறைமுகப் பிரச்சாரம் செய்ய முயற்சிக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் கடிதம் கொடுக்கப்பட உள்ளது. தேவைப்பட்டால் நீதிமன்றத்தையும் அணுகுவோம் என்று தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.