Tamilசெய்திகள்

மோடியால் மீண்டும் பிரதமராக முடியாது – மு.க.ஸ்டாலின்

தஞ்சையில் நடந்த திராவிடர் கழக சமூக நீதி மாநாடு நடந்தது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார்.

மாநாட்டில் கலந்து கொண்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தன்மானத்தோடு, சுயமரியாதையோடு வாழ திராவிட இயக்கத்தை விட்டால் வேறு எதுவும் கிடையாது. தி.மு.க.வும், தி.க.வும் இரட்டை குழல் துப்பாக்கி என்று கருணாநிதி கூறினார். தி.க.வும், தி.மு.க.வும் இரட்டை குழல் துப்பாக்கி மட்டும் அல்ல, காவல் தெய்வங்களாக விளங்கிக்கொண்டு இருக்கிறது. இந்த 2 கழகங்கள் இருக்கிற வரை எத்தனை காவிகள், மத அமைப்புகள், சாதி அமைப்புகளை கூட்டிக்கொண்டு வந்தாலும் திராவிட இயக்கத்தை எந்த கொம்பனாலும் வீழ்த்த முடியாது.

பெரியாரின் கொள்கைகளுக்கு சட்ட ரீதியாக அங்கீகாரம் கிடைத்ததற்கு தி.மு.க. ஆட்சி தான் காரணம். இந்த மாநாட்டிற்கு சமூக நீதி மாநாடு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சமூகத்தில் தரைவிரித்து ஆடும் அநீதிகள், ஆக்கிரமிக்கக்கூடிய சூழ்நிலையில் இந்த மாநாடு தேவை தான். சமூக அநீதி என்பது மத்திய அரசின் அநீதியாகவும், மாநில அரசின் அநீதியாகவும் மாறி இருக்கிற இந்த காலக்கட்டத்தில் சமூக நீதியை காக்க மாநாடு மட்டும் அல்ல, அதையும் தாண்டி பல போராட்டங்கள் நடத்த வேண்டிய அவசியத்துக்கு வந்துள்ளோம்.

ஓட்டு, அரசியல் லாபத்துக்காக பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று ஓட்டுக்காக மத்திய அரசு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குகிறது. ஆனால் விவசாயிகள் டெல்லியில் போராடிய போது மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. 5 மாநில தேர்தலில் தோற்றதால் மக்களை ஏமாற்றி எப்படியாவது ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காக ரூ.6 ஆயிரம் வழங்குகிறார்கள். இது பூச்சி மருந்து வாங்க கூட பத்தாது. தமிழக அரசு ரூ.2 ஆயிரம் வழங்குகிறது. தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு எவ்வளவோ சாதனைகள் செய்யப்பட்டன.

ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று எந்தவித முன்னறிவிப்பு இன்றி இரவோடு இரவாக அறிவித்து எங்களிடம் இருந்து பிடுங்கிக்கொண்டு இப்போது ரூ.6 ஆயிரமா?. இது எதை காட்டுகிறது என்றால் திருட்டுத்தனத்தை காட்டுகிறது. பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா 15 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டது. அவர் மீண்டும் பிரதமராக வரும் வாய்ப்பு கிடையாது, அதற்கான சூழல் இல்லை.

விரைவில் பாராளுமன்றத்துக்கு வரப்போகிற தேர்தல் மூலம் மத்தியில் ஆட்சி மாற்றம் நிச்சயம் வரப்போகிறது. அதற்கு தி.மு.க. காரணமாக அமையப்போகிறது. பிரதமர் ராகுல்காந்தி தான் என்று நாங்கள் ஏற்கனவே அறிவித்து விட்டோம். அந்த நிலை உருவாக போகிறது.

பாராளுமன்றத்துக்கு வராத, உச்சநீதிமன்றத்தையே மிதிக்காத ரிசர்வ் வங்கி, சி.பி.ஐ. அதிகாரிகளை பந்தாடுகிற, மாநில அரசுகளை மதிக்காத, முதல்-அமைச்சர்களை மதிக்காத மோடி ஆட்சியை அப்புறப்படுத்தும் நாள் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. பிரதமர் மோடியுடன் சேர்ந்துள்ள அனைவரையும் எதிர்த்துக்கொண்டு இருக்கிறோம். மதவாத சக்திகளை தேர்தல், பிரசார களத்தில் முறியடிக்க தி.க. இந்த மாநாட்டை கூட்டி உள்ளது. எனவே இன எதிரிகளை வீழ்த்திட வாரீர். தயாராவீர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது:-

தி.மு.க.வும், திராவிடர் கழகமும் இரட்டை குழல் துப்பாக்கி என்பார்கள். இப்போது விடுதலை சிறுத்தை கட்சியும் சேர்ந்துள்ளதால் மூன்று குழல் துப்பாக்கியாக உள்ளது. இந்த கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெறும். சந்தர்ப்பவாத கூட்டணி படுதோல்வி அடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:-

அரசியல் வரலாற்றில் கூட்டணி, தொகுதி பங்கீடு விரைவாக முடிந்தது நமது கூட்டணியில் தான். ஆனால் உலக வரலாற்றில் ஒரே நேரத்தில் 2 கட்சிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தையை நடத்தியது பா.ம.க. மட்டும் தான். அவர்கள் அமைத்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டணி ஆகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம். காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி அருணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் , கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும், சமூக நீதிக்கு எதிராக உள்ள பொருளாதாரத்தில் நலிந்த பொது பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மோடி மீண்டும் பிரதமராக வாய்ப்பு இல்லை என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *