அந்தமானில் உள்ள தீவுக்கூட்டங்கள் சிறந்த சுற்றுலா தலங்களாக விளங்கி வருகின்றன. இங்குள்ள தீவுகளை பார்வையிடுவதற்காக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். அந்தவகையில் கடந்த 15-ந்தேதி அந்தமானின் ஹேவ்லாக் மற்றும் நைல் தீவுகளுக்கு சுமார் 1100 சுற்றுலா பயணிகள் சென்றிருந்தனர்.
அப்போது மோசமான வானிலையால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் அவர்களால் திரும்ப முடியவில்லை. தீவிலேயே சிக்கிக்கொண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் அவர்களை மீட்பதற்காக அந்தமான் நிர்வாக அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். அவர்களுடன் இணைந்து கடற்படை மற்றும் கடலோர காவல்படை கப்பல்களும் மீட்பு பணிகளை மேற்கொண்டன.
இதன் மூலம், அங்கு சிக்கியிருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் கடந்த 2 நாட்களாக அந்தமான் தலைநகர் போர்ட்பிளேருக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்கிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு அவர்கள் திரும்பி சென்றனர்.