மோசமான பீல்டிங்கால் தான் தோல்வியடைந்தோம் – விராட் கோலி கருத்து
நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா 0-3 என இழந்தது. முதல் போட்டியில் 347 ரன்கள் குவித்தும் வெற்றி பெற முடியவில்லை. 2-வது போட்டியில் 273 ரன்னை சேஸிங் செய்ய முடியவில்லை. இன்று 296 ரன்கள் அடித்தும் பயனில்லை.
மோசமான பீல்டிங்கே ஒயிட்வாஷ் ஆனதற்கு முக்கிய காரணம் என விராட் கோலி தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘நாங்கள் விளையாடிய மூன்று போட்டிகளும் மிகவும் மோசமானது என்று சொல்ல முடியாது. பேட்ஸ்மேன்கள் கடினமான சூழ்நிலையில் இருந்து ஃபார்முக்கு திரும்பியது எங்களுக்கு நேர்மறையாக அமைந்தது. ஆனால் நாங்கள் செய்த பீல்டிங் மற்றும் பந்து வீச்சில், வெற்றி பெறுவதற்கான போதுமான கம்போசர் இல்லை.
இந்தத் தொடரில் நாங்கள் வெற்றி பெறுவதற்கு தகுதியான அணி கிடையாது. நாங்கள் மிகவும் மோசமாக விளையாடவில்லை. வாய்ப்புகளை எங்களால் அறுவடை செய்ய முடியாமல் போனது. இந்தத் தொடரில் விளையாடிய இந்திய அணியின் இளம் வீரர்களுக்கு சிறந்த அனுபவம். அவர்கள் காலூன்றுவதற்கான வழிகளை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
எங்களை விட நியூசிலாந்து மிகத் தீவிரமாக விளையாடினார்கள். எங்களை ஒயிட்வாஷ் செய்ய அவர்கள் தகுதியானவர்கள். நாங்கள் டெஸ்ட் தொடரை மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் தற்போது டெஸ்டில் பேலன்ஸ் அணியாக திகழ்கிறோம். டெஸ்ட் தொடரை வெல்ல முடியும் என நினைக்கிறோம். ஆனால், சரியான மனநிலையில் போட்டிகளை எதிர்கொள்ள வேண்டும்’’ என்றார்.