Tamilசெய்திகள்

மோசமான பஞ்சத்தை நோக்கி செல்லும் இலங்கை!

இலங்கையில் வரலாறு காணாத வகையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கிடைக்கும் பொருட்களும் அதிக விலைக்கு விற்கப்படுவதால் வாங்கி பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். கடுமையான கடன் நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கை அரசுக்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும், உலக வங்கி, சர்வதேச நிதியம் போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களும் கடனுதவி வழங்கி வருகின்றன. ஆனாலும் நாட்டின் இன்னல்களுக்கு விடை தெரியவில்லை.

மக்களின் துயரங்களும் முடிவுறவில்லை. மாறாக நாட்டின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இதை அதிகாரிகளும் உறுதிப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் இலங்கை பொது நிர்வாகத்துறை செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரியந்தா மயதுன்னே அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

இலங்கை பஞ்சத்தின் விளிம்பில் உள்ளது. மே மாதத்தை ஒப்பிடுகையில் இந்த மாதம் ஒட்டுமொத்த பொருளாதார நெருக்கடி மிகவும் மோசமடைந்து இருக்கிறது. நாடு பஞ்சத்தை எதிர்நோக்கி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவோ, ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவோ அரசிடம் பணம் இல்லை.

பெரும்பாலான இலங்கை மக்களுக்கு ஒரு கோப்பை பால் கூட, ஆடம்பரமாக மாறி விட்டது. தங்கள் தேவையை சமாளிப்பது மிகவும் கடினமாகி விட்டது. இலங்கையில் வழங்கப்படும் கிரெடிட் கார்டுகள் விரைவில் பயனற்றதாகிவிடும். உண்மையை மறைப்பதிலோ அல்லது மக்களை ஏமாற்ற முட்டாள்தனமான முயற்சிகளை மேற்கொள்வதாலோ எந்த பயனும் இல்லை.

இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கு, நிபந்தனைகளுடன் வரும் சர்வதேச நிதியுதவி உள்ளிட்ட தொலைநோக்கு பொருளாதார சீர்திருத்தங்களுக்கு செல்வதை தவிர வேறு வழியில்லை. அரசியல் கட்சிகள் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக குழுக்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து ஏற்றுக்கொள்ளாத வரையில் இந்த நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என்று மயதுன்னே கூறினார். இலங்கை மக்களின் நிலைமை இவ்வாறு மோசமாகிக்கொண்டே செல்லும் நிலையில், அங்கு உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளின் நிலைமையோ இன்னும் மோசமாகி வருகிறது.

இந்த விலங்குகளுக்கு நாள்தோறும் வழங்க வேண்டிய உணவுக்கான பணத்தை அரசால் வழங்க முடியவில்லை. இதனால் அவை பட்டினியில் சாகும் நிலை ஏற்பட்டிருப்பதாக உயிரியல் பூங்காக்கள் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பார்வையாளர் வருகை குறைந்ததும் இதற்கு ஒரு காரணம் என அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே இலங்கை உணவு நெருக்கடியை தீர்க்க அரசு உறுதிபூண்டுள்ளதாக வேளாண்துறை மந்திரி மகிந்த அமரவீரா தெரிவித்து உள்ளார். இதற்காக தேசிய உரக் கொள்கை மற்றும் உரத் தேவைகளுக்காக பாஸ்பேட் இருப்புகளை உகந்த முறையில் பயன்படுத்துமாறு கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதன் மூலம் அரிசி உற்பத்தியில் அடுத்த ஆண்டுக்குள் நாடு தன்னிறைவை எட்டும் என்றும் அவர் கூறினார்.

நெல் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், சந்தை விலையை விட கூடுதல் விலைக்கு விவசாயிகளிடம் இருந்து அரிசி கொள்முதல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார். இந்த நிலையில் இலங்கை அரசில் அதிபரின் வானளாவிய அதிகாரத்தை குறைத்து நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை அதிகரிக்கும் வகையில் 21-வது சட்ட திருத்தம் கொண்டுவர பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

ஆனால் இதற்கு அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. குறிப்பாக ஆளும் இலங்கை மக்களின் கட்சி எம்.பி.க்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்த கட்சியில் ராஜபக்சே குடும்பத்தின் விசுவாசிகளாக கருதப்படும், அதுவும் பசில் ராஜபக்சேவின் ஆதரவு எம்.பி.க்கள் பலரும் இந்த முடிவை எதிர்த்து வருகிறார்கள்.

இது தொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய இந்த எம்.பி.க்கள், அரசியல் சாசன சீர்திருத்தங்களை விட பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதுதான் முக்கியமானது என கூறியுள்ளனர். அதேநேரம் இந்த நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச உதவியை பெற வேண்டுமானால் அரசியல்சாசன சீர்திருத்தம் அவசியம் என்று வேறு சில எம்.பி.க்கள் கூறினர். இதனால் இந்த விவகாரத்தில் முடிவு எடுப்பதில் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான புதிய அரசுக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டு உள்ளது.