மோசடி புகார் குறித்து நடிகை ஜீவிதா விளக்கம்
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்த ஜீவிதா, தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். பின்னர், நடிகர் ராஜசேகரை திருமணம் செய்துகொண்டு ஐதராபாத்தில் வசித்து
வருகிறார். ராஜசேகர், பூஜா குமார் நடித்த கருட வேகா படம் 2017-ல் திரைக்கு வந்தது. இந்த படத்தை தயாரித்த கோட்டீஸ்வர ராஜூ தற்போது அளித்துள்ள பேட்டியில், “ஜீவிதாவும் ராஜசேகரும்
என்னிடம் ரூ.26 கோடி கடன் பெற்றனர். அதற்காக பூந்தமல்லி அருகே உள்ள 3 ஏக்கர் நிலத்தை அடமானம் வைத்து காசோலை கொடுத்தனர். ஆனால், எனக்கு தெரியாமல் அந்த நிலத்தை வேறு
ஒருவருக்கு ஜீவிதா விற்று விட்டார். இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். நீதிமன்றம் ஜீவிதாவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உள்ளது” என்றார்.
இதற்கு ஜீவிதா விளக்கம் அளித்து அவர் கூறும்போது, “கோட்டீஸ்வர ராஜூ தெரிவித்துள்ள கருத்தில் உண்மை இல்லை. கருடவேகா படத்துக்கு அவர்தான் தயாரிப்பாளர். பிறகு எப்படி அவர்
எங்களுக்கு கடன் கொடுத்திருக்க முடியும்? அவர் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்க நினைக்கிறார். அதில் நான் சிக்கமாட்டேன். நான் பலவீனமானவள் அல்ல. வழக்கை சட்டப்படி சந்திப்பேன்.
யார் குற்றவாளி என்பது நீதிமன்றம் மூலம் தெரியவரும்” என்றார்.