Tamilசினிமா

மோசடி கும்பலிடம் பணத்தை இழந்த நடிகர் விக்னேஷ் – போலீசில் புகார்

 

கிழக்குசீமையிலே, பசும்பொன் உள்ளிட்ட ஏராளமான தமிழ்படங்களில் நான் நடித்துள்ளேன். 30 வருடங்கள் சினிமாவிலும், அதன்பிறகு சொந்தமாகவும் தொழில் செய்கிறேன். எனது கடையில்
வாடகைதாரராக இருந்த ராம்பிரபு என்பவர் என்னிடம் நட்பு ரீதியில் பழகினார். அவருடன் கைத்துப்பாக்கி வைத்திருந்த பாதுகாப்பு அதிகாரிகள் சபாரி உடையில் இருப்பார்கள். சைரன் கருவி
பொருத்திய காரில்தான் அவர் உலா வருவார். அவர் ஒரு வி.ஐ.பி.யாக இருக்கலாம் என்று நினைத்தேன்.

இரிடியம் என்ற பொருள் தனக்கு கிடைத்ததாகவும், அந்த பொருளை மத்திய அரசு உதவியுடன், ஆஸ்திரேலியாவில் உள்ள கம்பெனிக்கு விற்றதாகவும், அதன்மதிப்பு ரூ.3 லட்சம் கோடி என்றும்
கூறினார். இதனால்தான் எனக்கு மத்திய அரசு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு கொடுத்துள்ளது, என்றும் ராம்பிரபு கூறினார்.

இரிடியம் விற்கும் தொழிலை சட்டபூர்வமாக செய்வதாக சொன்னார். அதில் முதலீடு செய்பவர்களுக்கு பல மடங்கு லாபம் கிடைக்கும் என்றும் கூறினார். இது சம்பந்தமாக சென்னை கிண்டியில் உள்ள
நட்சத்திர ஓட்டல் ஒன்றிலும், விருதுநகர் பகுதியில் உள்ள பண்ணை வீடு ஒன்றிலும் நடந்த கூட்டங்களில் நான் கலந்து கொண்டேன். அதில் இரிடியம் விற்பனை பற்றி எடுத்து சொல்லப்பட்டது.

அதில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் பங்கு பெற்றனர். இதனால் ராம்பிரபு சொன்னதை உண்மை என்று நான் நம்பினேன். மேலும் இந்திய ரிசர்வ் வங்கியின்
அனுமதியுடன் இந்த தொழில் செய்வதாகவும் சொன்னார்கள்.

என்னிடம் ரூ.5 லட்சம் கொடுத்தால், ரூ.500 கோடியாக உங்களுக்கு திருப்பி தருகிறேன் என்றும் நம்பிக்கை ஊட்டும் வகையில் பேசினார். ராம்பிரபுவின் பேச்சை நம்பி நான் எனது வங்கி கணக்கு
மூலமாகவும், நண்பர்களிடம் கடனாக பெற்றும் ரூ.1.81 கோடி கொடுத்தேன். அதற்கு பிறகு அவர் என்னிடம் பேசுவதை தவிர்த்தார். ஒரு முறை நேரில் சந்தித்தபோது, ரூ.500 கோடி கன்டெய்னர் லாரி
மூலம் வருகிறது என்றும், வந்தவுடன் தருவதாகவும் சொன்னார்.

என்னைப்போல நிறைய பேர்களிடம் அவர் இதுபோல் பணம் வசூலித்திருப்பது தெரியவந்தது. யாருக்கும் சொன்னபடி பணம் கொடுக்கவில்லை என்பதும், அவர் மோசடி பேர்வழி என்றும் தகவல்
வந்தது. இதற்கிடையில் மோசடி வழக்கில் விருதுநகர் போலீசார் ராம்பிரபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். என்னைப்போல 500 பேரிடம் ராம்பிரபு பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக
அறிகிறேன். அவர் மீதும், அவருடன் இருப்பவர்கள் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு புகார் மனுவில் நடிகர் விக்னேஷ் குறிப்பிட்டுள்ளார்.