மோகன்லால் தற்போது மான்ஸ்டர் என்ற புதிய மலையாள படத்தில் நடித்துள்ளார். இதில் லட்சுமி மஞ்சு, ஹனிரோஸ், சித்திக் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இயக்குனர் வைசாக் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 21-ந் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் 3 நாட்களுக்கு இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு முடிந்துள்ளது.
மான்ஸ்டர் படத்தை ‘கல்ப்’ நாடுகள் எனப்படும் வளைகுடா நாடுகளில் திரையிட தடை விதிக்கப்பட்டு உள்ளது. மான்ஸ்டர் படத்தை அந்த நாடுகளின் தணிக்கை குழுவுக்கு படக்குழுவினர் அனுப்பிவைத்தனர். படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள், படத்தில் ஓரின சேர்க்கையாளர்கள் குறித்த காட்சிகள் இடம் பெற்று உள்ளதால் திரையிட அனுமதி மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
வளைகுடா நாடுகளில் படம் வெளியாகாவிட்டால் வசூல் பெருமளவு பாதிக்கும் என்பதால் சர்ச்சை காட்சிகளை நீக்கிவிட்டு மீண்டும் வளைகுடா நாடுகளின் தணிக்கை குழுவுக்கு அனுப்ப படக்குழுவினர் முடிவு செய்து இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் பஹ்ரைன் நாட்டில் இப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, படத்தை மறுமதிப்பீடு செய்ய தணிக்கை குழுவிடம் படக்குழு சமர்ப்பித்துள்ளதாகவும், படத்தில் உள்ள சர்ச்சை காட்சிகளை நீக்குமாறு தயாரிப்பாளர்களிடம் தணிக்கை குழு கூறியதாகவும் கூறப்படுகிறது. அதன்படி படத்திற்கு விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.