மொகாலியில் உருவாகும் ஒலிம்பிக் தரத்திலான துப்பாக்கி சுடும் மையம்
பஞ்சாப் மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் ராணா குர்மீத் சிங் சோதி, மொகாலியில் துப்பாக்கி சுடும் மையத்திற்கு இன்று அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மொகாலியில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஒலிம்பிக் தரத்தில் துப்பாக்கி சுடும் மையம் அமைக்கப்படும். இரண்டு அடுக்கு கொண்ட இந்த மையத்தில், 80 இலக்குகள் இருக்கும். அனைத்து இடங்களிலும் எலக்ட்ரானிக் ஸ்கோர்போர்டு பொருத்தப்படும். இதற்காக ரூ.8.18 கோடி செலவு செய்யப்படும்.
விளையாட்டின் தரத்தை மேம்படுத்துவதற்கு அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. பாட்டியாலாவில் விளையாட்டு பல்கலைக்கழகம் தவிர விளையாட்டு உள்கட்டமைப்புகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, விளையாட்டு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே, சர்வதேச அளவிலான விளையாட்டு வீரர்களை அதிகபட்ச எண்ணிக்கையில் தயார் செய்ய வேண்டும்.
ரூ.100 கோடி செலவில் அஸ்ட்ரோ டர்ப் ஹாக்கி மைதானம், தடகளப் பாதை போன்ற விளையாட்டு உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.