Tamilசெய்திகள்

மைசூரில் குடிநீர் பிரச்சனை ஏற்பாது – அதிகாரிகள் தகவல்

மைசூரு டவுன் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக இரவில் மழையும், பகலில் வெயிலும் அடித்து வருகிறது. கடந்த 19-ந்தேதி இரவு கனமழை பெய்தது. சில இடங்களில் இடி- மின்னலுடன் மழை பெய்தது. இதனால், சாலைகளில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள், மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மைசூருவில் மழை காரணமாக கடந்த 3 நாட்களாக சாலையோர வியாபாரிகள் அவதி அடைந்தனர். அதாவது இரவு 7 மணி முதல் 9 மணி வரை மழை தொடர்ந்து பெய்து வந்தது. இதனால் சாலையோர வியாபாரிகள் கடைகளை மூடிக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டு செல்கின்றனர். மேலும், இரவு நேரங்களில் மழை பெய்வதால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.

காரணம் பலத்த காற்றுடன் பெய்யும் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மரங்கள் ஆங்காங்கே சாலைகளில் சாய்ந்து விழுகின்றன. ஆனால், கிராமப்புற பகுதிகளில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும், அவர்கள் விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர். அதாவது டிராக்டர் மூலம் நிலங்களை உழுது விதைகளை விதைத்து வருகிறார்கள். இந்த ஆண்டு மைசூரு மாவட்டத்தில் அதிகளவு மழை பெய்ததால் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் போதுமான அளவு நீர் இருப்பு உள்ளது. எனவே மைசூருவில் கோடைகாலத்தில் குடிநீர் பிரச்சினை ஏற்படாது என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.