தென் இந்தியாவில் கர்நாடகத்தில் மட்டுமே பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அதனால் மீண்டும் கர்நாடக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க தேவையான நடவடிக்கைகளில் பா.ஜனதா தலைமை தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக பல்வேறு யுக்திகளை அக்கட்சி கடைப்பிடித்து வருகிறது. அதன்படி முதியவர்களுக்கு இந்த தேர்தலில் டிக்கெட் கொடுக்கவில்லை. அதிகளவில் புதுமுகங்களை களத்தில் அக்கட்சி இறக்கியுள்ளது. மேலும் கட்சி எங்கெல்லாம் பலவீனமாக உள்ளதோ அந்த பகுதிகளில் பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோர் பிரசார கூட்டங்களை நடத்தி வருவதுடன், ரோடு ஷோ நடத்தி பா.ஜனதாவுக்கு ஆதரவான அலையை உருவாக்கி வருகிறார்கள்.
அதுபோல் பெங்களூரு மாநகர் பகுதியில் உள்ள 28 தொகுதிகளில் 20 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என திட்டத்துடன் செயல்படும் பிரதமர் மோடி ஏற்கனவே பெங்களூருவில் 5 கிலோ மீட்டர் தூரம் திறந்த வாகனத்தில் ஊர்வலம் நடத்தி பா.ஜனதாவுக்கு ஆதரவு திரட்டினார். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதனால் அடுத்தகட்டமாக குஜராத் சட்டசபை தேர்தலில் அகமதாபாத் நகரில் பிரதமர் மோடி பிரமாண்ட ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களை கவர்ந்தது போல் பெங்களூரு மாநகரில் பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தி மக்கள் மத்தியில் பா.ஜனதாவுக்கு ஆதரவான அலையை உருவாக்க பா.ஜனதாவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த ரோடு ஷோவின் போது பெங்களூருவில் உள்ள 23 தொகுதி வாக்காளர்களை கவரும் வகையில் பிரமாண்ட ரோடு ஷோ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதாவது வருகிற 6-ந்தேதி இந்த பிரமாண்ட ரோடுஷோவுக்கு கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி, வருகிற 6-ந் தேதி ஒட்டு மொத்தமாக 36.6 கிலோ மீட்டர் தூரம் வரை அவர் திறந்தவாகனத்தில் ஊர்வலம் செல்ல உள்ளார். வருகிற 6-ந் தேதி காலை 11 மணியில் இருந்து மதியம் 1 மணிவரை சுரஞ்சன் தாஸ் ரோட்டில் இருந்து கே.ஆர்.புரம், சி.வி.ராமன் நகர், சாந்திநகர், சிவாஜிநகர் ஆகிய சட்டசபை தொகுதிகளில் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். அதாவது காலையில் 10.1 கிலோ மீட்டருக்கு அவர் ஊர்வலம் செல்ல உள்ளார். அதன்பிறகு, மாலை 4 மணியில் இருந்து 10 மணி வரை 26.5 கிலோ மீட்டருக்கு பிரதமர் திறந்த வாகனத்தில் ஊர்வலம் செல்ல உள்ளார்.
அதாவது மாலையில் ஜெயநகர், பத்மநாபநகர், பசவனகுடி, சிக்பேட்டை, விஜயநகர், கோவிந்தராஜநகர், ராஜாஜிநகர், மகாலட்சுமி லே-அவுட் உள்ளிட்ட தொகுதிகளில் பா.ஜனதா வேட்பாளருக்கு அவர் ஆதரவு திரட்ட உள்ளார். பிரதமர் மோடியின் ஊர்வலத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதால், வருகிற 6-ந் தேதி மாநிலத்தின் வேறு எந்த பகுதிக்கும் செல்லாமல் பெங்களூருவிலேயே முகாமிட்டு பிரதமர் மோடி பிரசாரம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூருவில் பிரதமர் மோடி 36 கிலோ மீட்டர் ஊர்வலம் செல்வதால், பாதுகாப்புக்கு ஏற்பாடுகள், போக்குவரத்து மாற்றத்திற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்துவருகிறார்கள்.