X

மே மாதத்திற்கான பாமாயில், பருப்பை ஜூன் மாதம் துவக்கத்தில் பெற்றுக்கொள்ளலாம்

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30-க்கும், ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25-க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது.

பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பாமாயில் மற்றும் துவரம் பருப்புக்கான ஒப்பந்தப் புள்ளிகள் மீதான முடிவுகள் மேற்கொண்டு அப்பண்டங்களைக் கொள்முதல் செய்வதில் காலதாமதம் நேரிட்டது. இருப்பினும், அரசின் தொடர்ந்த சீரிய முயற்சிகள் காரணமாக நகர்வுப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு நேற்று வரை 82,82,702 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ துவரம் பருப்பினையும், 75,87,865 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு லிட்டர் பாமாயில் பாக்கெட்டினையும் நியாய விலை கடைகளிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.

குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாத ஒதுக்கீட்டினை இம்மாத இறுதிக்குள் வழங்கிட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும், மே மாதத்தில் பருப்பு மற்றும் பாமாயில் பெற முடியாதவர்கள் வசதிக்காக ஜூன் முதல் வாரம் வரை நியாயவிலைக் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பெற்றுக்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளும்படி மாவட்ட வழங்கல் அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

குடும்ப அட்டைதாரர்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டு மே மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட் பெற இயலாத அட்டைதாரர்கள் அவர்களுக்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை ஜூன் மாத முதல் வாரத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.