Tamilசெய்திகள்

மேற்கு வங்காள வன்முறையை உக்ரைன் – ரஷ்யா போருடன் ஒப்பிடும் பா.ஜ.க தலைவர்

மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய போதுமான அவகாசம் வழங்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும், எதிர்க்கட்சி வேட்பாளர்களை வேட்புமனு செய்ய விடாமல் ஆளுங்கட்சி தடுப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளன.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சில இடங்களில் வன்முறை ஏற்பட்டுள்ளது. இதனால் உள்ளாட்சி தேர்தலில் மத்திய பாதுகாப்புப்படை வீரர்களை பாதுகாப்பு பணியில் அமர்த்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் வன்முறையை உக்ரைன்- ரஷியா போருடன் ஒப்பிட்டு மேற்கு வங்காள மாநில பா.ஜனதா பொதுச்செயலாளர் அக்னிமித்ரா பால், மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜியை விமர்சனம் செய்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் வன்முறை குறித்து அக்னிமித்ரா பால் கூறியிருப்பதாவது:-

வேட்புமனு தாக்கல் செய்ய 5-6 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டது. எதிர்க்கட்சிகளுடன் எந்தவித ஆலோசனை நடத்தாமலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆலோசனைகள் பெறாமல் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்பது தெரிந்ததே. தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து பா.ஜனதா மற்றும் மற்ற கட்சிகளின் வேட்பாளர்களை வேட்புமனு தாக்கல் செய்ய விடுவதில்லை.

டைமண்ட் ஹார்பர், ஜாய்நகர், கேனிங், காக்விப், பர்தமான் பகுதிகளில் பா.ஜ.க.-வினர் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இரும்பு கம்பிகள் கொண்டு தாக்கியுள்ளனர். இங்கு ரத்தக்களரியை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது ரஷியா- உக்ரைன் போரா? நாம் போருக்காக சண்டையிடுகிறோமா?.

இந்த வன்முறைக்காகத்தான் கடந்த 6 முதல் 8 மாதங்களில் மேற்கு வங்காளத்தில் அதிகமான வெடிபொருட்கள் காணப்பட்டது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. காவல்துறையின் மந்திரியாக இருக்கும் மம்தா பானர்ஜி இதற்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

மேற்கு வங்காளத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. இதனால் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும். மத்தியப்படை வரவழைக்கப்படவில்லை என்றால், மேற்கு வங்காளம் போர்க்களமாகத்தான் இருக்கும். மத்திய படையை அனுப்பி வைக்க மத்திய தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இல்லையெனில் அனைத்து கட்சிகளின் தொண்டர்கள் ஏராளமானோர் உயிரிழக்க நேரிடும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.