Tamilசெய்திகள்

மேற்கு வங்காள தேர்தல் – 6ம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது

மேற்கு வங்காளத்தில் இன்று 6-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதற்காக வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

8 கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து வரும் மேற்கு வங்காளத்தில் 5 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்திருக்கிறது. மீதமுள்ள 3 கட்ட தேர்தலுக்காக மாநில தேர்தல் களம் எப்போதும் போலவே கொதிநிலைக்கு குறைவின்றி நகர்ந்து வருகிறது.

ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா, காங்கிரஸ்-இடதுசாரிகள் என மாநிலத்தில் அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் கட்சிகள் அனைத்தும் தேர்தல் களத்தில் தீவிரமாக மல்லுக்கட்டி வருகின்றன.

இந்த சூழலில் 6-வது கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் வடக்கு 24 பர்கானாக்கள், நாடியா, கிழக்கு பர்தமான், உத்தர் தினாஜ்பூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த 43 தொகுதிகளில் இந்த வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதற்காக மேற்படி மாவட்டங்களில் 14,480 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் தேர்தல் ஊழியர்கள் அனைவரும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

இன்றைய தேர்தலில் வாக்களிக்க தகுதியான வாக்காளர்கள் 1.03 கோடி ஆகும். இதில் 50.65 லட்சம் பெண் வாக்காளர்களும், 256 மூன்றாம் பாலினத்தவர்களும் அடங்குவர்.

இன்றைய தேர்தல் களத்தில் 306 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது. இதில் 27 பேர் பெண்கள் ஆவர். அதுமட்டுமின்றி 82 சுயேச்சைகளும் இதில் அடங்குவர்.

வாக்குப்பதிவு நடைபெறும் 43 தொகுதிகளிலும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மக்கள் சுதந்திரமாகவும், அமைதியாகவும் வாக்களிப்பதற்காக மாநில போலீசாருடன் இணைந்து, 1,071 கம்பெனி துணை ராணுவமும் களமிறக்கப்பட்டு உள்ளனர்.

6-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 43 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் 37 பேர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 23, காங்கிரஸ் 12 என பிரதான கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளன.

இன்றைய தேர்தலை சந்திக்கும் வேட்பாளர்களில் மாநில மந்திரிகள் மற்றும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த உஜ்ஜல் பிஸ்வாஸ், ஸ்வபன் தேப்நாத், சந்திரிமா படடாச்சார்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் தன்மோஸ் பட்டாச்சார்யா, பா.ஜனதா தேசிய துணைத்தலைவர் முகுல் ராய், மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மொகித் செங்குப்தா, அப்துஸ் சத்தார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

கொரோனாவின் 2-வது அலை காரணமாக மேற்கு வங்காளத்தில் கடைசி 3 கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரங்களை முன்கூட்டியே முடிக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. அந்தவகையில் இன்றைய 6-ம் கட்ட வாக்குப்பதிவுக்காக அனல் பறந்த தேர்தல் பிரசாரம் கடந்த 19-ந்தேதி மாலையிலேயே முடித்துக்கொள்ளப்பட்டது.

மாநிலத்தில் மீதமுள்ள 2 கட்ட வாக்குப்பதிவுகள் முறையே வருகிற 26 மற்றும் 29-ந்தேதிகளில் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து மே 2-ந்தேதி வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

6-ம் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கிய உடன் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். கடந்த 4-ம் கட்ட தேர்தலின் போது சீத்தல்குச்சி தொகுதிக்கு உள்பட்ட ஜார்பட்கி என்ற பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு அருகே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.