மேற்கு வங்காளம், அரியானா, உத்தரகாண்ட் மாநிலங்களில் குடியுரிமை வழங்கும் பணி தொடங்கியது
குடியுரிமை திருத்த சட்டம் இந்தியா பாராளுமன்றத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அதன்படி வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதிக்கு முன்னதாக குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், ஜெயின்கள், புத்தர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள் இந்திய குடியுரிமை பெற முடியும்.
சுமார் நான்கு வருடத்திற்குப் பிறகு கடந்த மார்ச் மாதம் 11-ந்தேதி சிஏஏ நடைமுறைக்கு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இதற்காக விண்ணப்பிக்க மத்திய உள்துறை அமைச்சகம் பிரத்யேக இணைய தளம் உருவாக்கியிருந்தது. டெல்லியில் விண்ணப்பத்திருந்தவர்களுக்கு கடந்த 15-ந்தேதி முதற்கட்டமாக குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முதல் மேற்கு வங்காளம், அரியானா, உத்தரகாண்ட் மாநிலத்தில் குடியுரிமை வழங்கும் பணி தொடங்கியது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அந்தந்த மாநிலத்தில் இதற்கான அதிகாரம் பெற்ற மாநில குழு இந்த சான்றிதழை வழங்கும்.
2019-ம் ஆண்டு இதற்கான மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சிஏஏ-வை அமல்படுத்துவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. சிஏஏ இந்த நிலத்தின் சட்டம். எதிர்க்கட்சிகள் மக்களை தவறாக வழிநடுத்துகிறது என அமித் ஷா தெரிவித்திருந்தார்.
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் சிசிஏ-வை தங்களுடைய மாநிலத்தில் அமல்படுத்த அனுமதிக்கமாட்டோம் எனத் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.