மேற்கு வங்காளத்தில் மூன்று தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. பவானிபூர் தொகுதியில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார்.
தேர்தல் அமைதியாக நடைபெற 72 கம்பெனி மத்திய பாதுகாப்புப்படை குவிக்கப்பட்டுள்ளது. இதில் பவானிபூர் தொகுதிக்கு மட்டும் 35 கம்பெனி வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 97 வாக்கு மையத்தில் உள்ள 287 பூத்தில் இவர்கள் பாதுகாப்பு பணியை மேற்கொள்வார்கள். ஒரு பூத்திற்கு மூன்று மத்திய போலீசார் பாதுகாப்பிற்கு போடப்பட்டுள்ளனர். வாக்கு மையத்தில் இருந்து 200 மீட்டர் தூரம் வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவர்களைத் தவிர மாநில போலீசார் பவானிபூர் தொகுதி வாக்குப்பதிவு பூத்திற்கு வெளியில் பாதுகாப்பு பணியை மேற்கொள்வார்கள். அவர்கள் 38 இடங்களில் தடுப்புகளை ஏற்படுத்தி பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள்.
வாக்குப்பதிவு நடைபெறும் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வருகிற 3-ந்தேதி (ஞாயிறு) வாக்குகள் எண்ணப்படும். பவானிபூரில் மம்தா பார்னஜியை எதிர்த்து பா.ஜனதா சார்பில் பிரியங்கா போட்டியிடுகிறார்.