X

மேயர் பதவி கிடைக்கும் என்பதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை – பிரியா பேட்டி

 

பெரு நகரமான சென்னை மாநகராட்சியை பிரியா என்ற 28 வயது இளம்பெண் ஆளப்போகிறார். ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே 1688-ம் ஆண்டு கோட்டையை சுற்றிலும் 10 மைல் தொலைவை எல்லையாக வரையறுத்து சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்டு இருக்கிறது. அந்த அளவுக்கு மிகப்பழமையும், பாரம்பரியமும் மிக்கது சென்னை மாநகராட்சி.

ஆரம்ப காலத்தில் 12 மாமன்ற உறுப்பினர்கள் இருந்திருக்கிறார்கள். பாரம்பரியமான இந்த மாநகராட்சியை பல பிரபலங்கள் மேயராக இருந்து அலங்கரித்து வந்திருக்கிறார்கள்.

ஆனால் முதல்முறையாக ஒரு பட்டியல் இனத்தை சேர்ந்த பெண், அந்த பெருமைக்குரிய சிம்மாசனத்தில் வீற்றிருந்து இந்த பெருநகராட்சியை ஆட்சி செய்யப்போகிறார். யார் அந்த பெண் என்று பல நாட்களாக கேட்கப்பட்ட கேள்விக்கு விடையும் கிடைத்து விட்டது.

முன்னாள் எம்.எல்.ஏ. செங்கை சிவமின் மருமகள் என்ற அரசியல் அடையாளத்தை மட்டுமே கொண்டவர். மேயராக பதவியேற்ற பிரியாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

கேள்வி: சாதாரண முதுகலை பட்டதாரி பெண்ணான உங்களிடம் அரசியல் ஆர்வம் வந்தது எப்படி?

பதில்: படிக்கும் காலத்தில் நான் ஒரு ஆசிரியராகத்தான் வர வேண்டும் என்று ஆசைப்பட்டதுண்டு. அந்த எண்ணத்தில்தான் எனது முதுகலை பட்டப்படிப்பு வரை படித்தேன். திருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்கு வந்த பிறகுதான் ஓரளவு அரசியலை பற்றிய ஆர்வமும் என்னுள் புகுந்தது.

அதற்கு காரணம் என்னுடைய மாமனார் மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்திருக்கிறார். அதேபோல் எனது தந்தையும் தி.மு.க.வில் பகுதி செயலாளராக இருப்பவர்.

கே: மேயர் ஆவோம் என்று நினைத்தீர்களா?

ப: மாநகராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டபோது கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கவுன்சிலர் ஆவேன் என்ற எதிர்பார்ப்போடு தேர்தல் களத்தை சந்தித்தேன். வெற்றி பெற வேண்டும் என்ற வேகத்தோடு உழைக்கவும் செய்தேன். ஆனால் மேயர் பதவி கிடைக்கும் என்பதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

ஒரு கனவுபோல் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேயர் வேட்பாளர் என்ற அறிவிப்பை கேட்டதும் கனவா? நனவா? என்று ஒரு கணம் திகைத்து போனேன்.

கே: மிகப்பெரிய மாநகராட்சி நிர்வாகம் எப்படி சமாளிப்பீர்கள்?

ப: இப்படி ஒரு வாய்ப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி இருக்கிறார். எந்த நம்பிக்கையோடு இந்த மாநகராட்சிக்கு என்னை மேயராக ஆக்கி உள்ளாரோ அந்த நம்பிக்கை வீண் போகாதபடி நிச்சயம் உழைப்பேன். மிகப்பெரிய மாநகராட்சி, பொறுப்பும் அதிகமாக இருக்கும்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் அமர்ந்து நிர்வாகம் செய்த சிம்மாசனம். இதில் நான் அமர்ந்தாலும் அவர்கள் அளவுக்கு நிச்சயம் என்னால் செய்ய முடியாது. ஆனாலும் அவர்கள் ஆலோசனையை பெற்று இயன்றவரை சென்னையின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்.

கே: முக்கியமான செயல்திட்டம் எதையாது வைத்துள்ளீர்களா?

ப: என்னுடைய முதல் திட்டம் என்பது சென்னையில் நான் மட்டுமல்ல எல்லோரும் சந்திப்பது மழை வெள்ள பிரச்சினைதான். இதற்கு ஒரு தீர்வு காண முயற்சி எடுப்பேன். சென்னையை பொறுத்தவரை காற்று மாசு அதிகமாகி வருகிறது. அதை தடுப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபடுவேன்.

குடிதண்ணீர், சாக்கடை பிரச்சினை உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளை முதலில் முன்னுரிமை கொடுத்து தீர்த்து வைப்பேன். வடசென்னையில் கல்வி வளர்ச்சி, சுகாதார மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரியாவின் கணவர் பொறியியல் பட்டதாரி. தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை பார்க்கிறார்.