Tamilசெய்திகள்

மேயர், துணை மேயர் பதவிகள் இளைஞரணியினருக்கு அதிகம் கிடைக்கும் – உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டத்தை நடத்தினார்.

இதில் தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசித்தார்.

தி.மு.க.வுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் வெற்றி, சட்டமன்ற தேர்தலில் வெற்றி, இப்போது நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் வெற்றி என ஹாட்ரிக் வெற்றியை மக்கள் நமக்கு தந்துள்ளனர்.

இந்த பரிசு கழகத் தலைவர், முதல்-அமைச்சரின் உழைப்புக்கு கிடைத்த வெற்றியாகும்.

எனவே தலைவரின் பிறந்த நாளில் மக்கள் பயன் அடையும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்குங்கள். கழக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும்.

தி.மு.க. இளைஞரணியில் அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். இதற்கு முன்பு தொகுதிக்கு 10 ஆயிரம் உறுப்பினர்கள் என்ற இலக்கை மாற்றி தொகுதிக்கு 25 ஆயிரம் உறுப்பினர்கள் என்ற இலக்கை அடையும் வகையில் இளைஞரணிக்கு உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.

வர இருக்கிற பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக உறுப்பினர் சேர்க்கையை இரட்டிப்பாக்க வேண்டும். அடிமட்ட தொண்டனுக்கும் உறுப்பினர் கார்டு இருக்க வேண்டும்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் இளைஞரணியில் அதிகம் பேருக்கு எம்.எல்.ஏ. ‘சீட்’ வாங்கி கொடுக்க முயற்சி செய்தேன். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் நிறைய பேருக்கு ‘சீட்’ வாங்கி கொடுக்க இயலவில்லை.

ஆரம்பத்தில் நான் எம்.எல்.ஏ. பதவி வேண்டாம் என்றுதான் இருந்தேன். ஆனாலும் பல்வேறு காரணங்கள், சூழ்நிலை காரணமாக உங்களுக்காக நான் எம்.எல்.ஏ. ஆகி உள்ளேன்.

இப்போது நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இளைஞரணி சார்பில் நிறைய பேர் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆகி இருக்கிறீர்கள்.

உங்களுக்காக முதல்- அமைச்சரிடம் பேசுவேன். மேயர், துணை மேயர், மண்டலக்குழு தலைவர் பதவிகள் இளைஞரணி நிர்வாகிகளுக்கு அதிகம் கிடைக்க தலைவரிடம் எடுத்து சொல்வேன். நிச்சயம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன்.

பிரதமர் மோடி தமிழகத்தை பாரபட்சமாக நடத்துகிறார். அதிக நிதி தமிழகத்துக்கு ஒதுக்குவதில்லை. நீட் தேர்வை எப்போதும் எதிர்ப்போம். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்துக்கு மாநில இளைஞரணி துணை செயலாளர்கள் ஆர்.டி.சேகர், தாயகம் கவி, பைந்தமிழ் பாரி, ஜோயல் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பாளர் ராஜா அன்பழகன் வரவேற்றார்.

கூட்டத்தில் சென்னை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏ.எம்.வி.பிரபாகரராஜா எம்.எல்.ஏ., கோட்டை அப்பாஸ் ஆகியோரும் பேசினார்கள்.

எம்.பி.க்கள் அண்ணாதுரை, தனுஷ்குமார், எம்.எல்.ஏ.க்கள் ஈஸ்வரப்பன், எபினேசர் உள்பட அனைத்து அமைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.