X

மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக அங்கிருந்து திறக்கப்படும் உபரிநீரும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு வினாடிக்கு 21 ஆயிரத்து 500 கன அடியில் இருந்து 26 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பாண்டில் 2-வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அணையிலிருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் நீர் இருப்பு 93.47 மில்லியன் கனஅடியாக உள்ளது.

இதையடுத்து சேலம் மாவட்டத்தில் காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து அதிகளவில் நீர் வெளியேற்றப்படுவதால் ஆற்றில் இறங்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.