மேட்டூர் அணையின் நீர் வீணாகமால் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மேட்டூர் அணையில் இன்று திறந்துவிடும் தண்ணீர் இந்த மாதம் 26 அல்லது 27-ந்தேதியன்று கல்லணையை வந்தடையும் வாய்ப்பு உள்ளது என்றும், அங்கிருந்து அன்றே பாசனத்திற்காக நீரை திறந்துவிடும் பட்சத்தில், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் உள்ளிட்ட அனைத்து கட்டுமானப் பணிகளும் பாதிக்கப்பட்டு தண்ணீர் வீணாகும் அபாயம் உள்ளது.
ஒப்பந்ததாரர்கள் தூர்வாரும் பணிகளை அவசர கதியில் முடித்து விடக்கூடிய நிலை ஏற்பட்டு அரசுக்கு பண விரயம் ஏற்படும் என்றும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே, மேட்டூரிலிருந்து திறந்து விடப்படும் நீரை முழுவதுமாக பயன்படுத்தும் வகையில், நீரை தேக்கி வைப்பதற்கான நீர் மேலாண்மை யுக்திகளை அரசு கடைபிடிக்க வேண்டுமென்று டெல்டா விவசாய சங்கங்கள் எதிர்பார்க்கின்றன.
“மக்களுக்கு உணவுப் பொருள்களை உண்டாக்கித் தருவதும், தானே உணவாக அமைவதும் மழையே” என்ற வள்ளுவரின் வாக்கினை மனதில் நிலை நிறுத்தி, மேட்டூர் அணை முன்கூட்டியே திறப்பதால் காவேரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய்கள் மற்றும் கிளைக் கால்வாய்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகள் பாதிக்கும் என்பதையும், இதன் காரணமாக நீர் வீணாகக்கூடும் என்பதையும் கருத்தில் கொண்டு, அனைத்துத் தரப்பினரிடமும் கலந்தாலோசித்து, மேட்டூரிலிருந்து திறந்துவிடப்படும் நீர் அனைத்தும் பாசனத்திற்கு முழுமையாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.