X

மேட்டூர் அணையின் நீர் வரத்து அதிகரிப்பு – 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபயா எச்சரிக்கை விடுப்பு

கேரளா மற்றும் கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 85 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 84 ஆயிரத்து 923 கன அடி அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதே போல கபினி அணைக்கு வினாடிக்கு 34 ஆயிரத்து 176 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 32 ஆயிரத்து 900 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த 2 அணைகளின் பாதுகாப்பு கருதி இன்று காலை 6 மணி முதல் உபரி நீர் 1 லட்சத்து 17 ஆயிரத்து 823 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் பெய்து வரும் மழையின் அளவை பொறுத்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு கூடுதலாகவும், குறைவாகவும், மாறி மாறி திறக்கப்பட்டு வருகிறது.

இந்த தண்ணீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரை புரண்டு ஒகேனக்கலுக்கு வருகிறது. நேற்று ஒகேனக்கல்லுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப் பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்து மேலும் அதிகரித்து இன்று காலை 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளையும் மூழ்கடித்தபடி தண்ணீர் செல்வதால் ஒகேனக்கல் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

காவிரி ஆற்றின் இரு கரைகளையம் மூழ்கடித்தபடி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. மேலும் ஐவர்பாணியை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்வதால் கரையோர பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையில் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நீர்வரத்து அதிகமாக உள்ளதால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், காவிரிகரைக்கு செல்லவும் 7-வது நாளாக தடை நீடிக்கிறது.

ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்படுகிறார்கள். மேலும் பிரதான அருவி செல்லும் நடைபாதை, மாமரத்து கடவு பரிசல் துறை, முதலைப்பண்ணை, ஆலம்பாடி உள்பட காவிரி கரையோர பகுதிகளில் வருவாய்துறையினர், ஒகேனக்கல் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கரையோர பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றின் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 82 ஆயிரத்து 642 கன அடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 349 கனஅடியாக அதிகரித்தது. இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 1 லட்சத்து 18 ஆயிரத்து 671 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 25 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவிலேயே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் மிக வேகமாக உயர்ந்து வருகிறது.

நேற்று காலை 112.96 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்து இன்று காலை 8 மணியளவில் 119.29 அடியானது. 11 மணி அளவில் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் காவிரியில் 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்பட உள்ளது. அணையின் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் உட்பட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் பகுதியை ஒட்டி தாழ்வான இடத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மேட்டூர் வருவாய்த்துறை சார்பில் தாசில்தார் முத்துராஜா முன்னிலையில் தண்டோரா போட்டு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். அணையில் நீர் இருப்பை பொறுத்து முன்னதாகவோ, காலதாமதமாகவோ திறந்த விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேட்டூர் அணை தற்போது நிரம்பி உள்ளதால் குறிப்பிட்ட நாட்களுக்கு 15 நாட்களுக்கு முன்னதாக இன்று (16-ந் தேதி) காலை அணையிலிருந்து கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் கார்மேகம் அணை திறந்து வைத்தார்.

தொடர்ந்த கால்வாயில் வழியாக வந்த தண்ணீரை பூக்களை தூவி விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். மேட்டூர் அணை கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனம் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் சுமார் 45,000 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் மேட்டூர் அடுத்த காவேரி கிராஸ் என்ற பகுதிக்கு சென்று கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய் என இரண்டாகப் பிரிந்து விவசாயிகளின் பாசன தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.