மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது! – கிறிஸ்த்துவ கோபுரமும், நந்தி சிலையும் வெளியே தெரிகிறது

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை கட்டப்படுவதற்கு முன் அணையின் நீர்த்தேக்கப்பகுதிகளில் சாம்பள்ளி, புதுவேலமங்கலம், காவேரிபுரம், கோட்டையூர் உள்ளிட்ட பல கிராமங்கள் இருந்தன. மேட்டூர் அணை கட்ட தொடங்கியதும் அந்த கிராமங்களில் வசித்து வந்த பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறினர்.

அப்போது காவேரிபுரம் என்ற கிராமத்தில் இருந்த ஜலகண்டேஸ்வரர் கோவில், மற்றும் அந்த கோவிலின் முகப்பில் இருந்த நந்தி சிலை, கோட்டையூரில் இருந்த ராஜா கோட்டை, புதுவேலமங்கலத்தில் இருந்த வீரபத்திரன் கோவில், பண்ணவாடியில் இருந்த இரட்டை கிறிஸ்தவ கோபுரங்கள் ஆகிய வழிபாட்டு தலங்களை அப்படியே விட்டு மக்கள் வெளியேறினர். பின்னர் அந்த கிராமங்களுடன் சேர்ந்து அந்த வழிபாட்டு தலங்களும் மேட்டூர் அணை தண்ணீரில் மூழ்கின.

மேட்டூர் அணை நீர்மட்டம் 76 அடியாக குறையும்போது கிறிஸ்தவ கோபுரமும், நீர்மட்டம் மேலும் குறையும்போது நந்தி சிலையும் வெளியே தெரிவது வழக்கம்.

அணை நீர்மட்டம் 76 அடியாக குறைந்தபோது பண்ணவாடி நீர்தேக்கப்பகுதியில் தண்ணீரில் மூழ்கியிருந்த கிறிஸ்தவ கோபுரம் கடந்த 11-ந் தேதி வெளியே தெரிந்தது. இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71.70 அடியாக குறைந்ததால் பண்ணவாடி நீர் தேக்கப்பகுதியில தண்ணீரில் மூழ்கியிருந்த நந்தி சிலையும் தற்போது வெளியே தெரிய தொடங்கியுள்ளது.

இந்த புராதன நினைவு சின்னத்தை பார்ப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் வந்து போவதால் தற்போது பண்ணவாடி பரிசல்துறை சுற்றுலா தலமாக மாறியுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news