Tamilசெய்திகள்

மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் வெளியேற்றம் – காவிரியில் வெள்ளப்பெருக்கு

கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்வதால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கனவே அந்த அணைகள் நிரம்பி உள்ளதால் உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இரு மாநில எல்லைகளிலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒனேக்கல்லுக்கு நேற்று முன்தினம் 88 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. ஒகேனக்கல்லில் இன்று காலை 1 லட்சத்து 15 ஆயிரம் கன அடியாக தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளையும் மூழ்கடித்த படி தண்ணீர் செல்கிறது.

ஒகேனக்கல் காவிரியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது.மேட்டூர் அணைக்கு நேற்று காலை 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலையும் அதே அளவில் வந்து கொண்டிருக்கிறது. அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.