கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் நீர் ஆதாரமான காவிரியில் மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்களின் விவசாயிகள் வாழ்வாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். நெல் உற்பத்தி குறையும். இந்த விவரங்களை தமிழக அரசு தொடர்ந்து எடுத்துரைத்தபோதும், கர்நாடக அரசு தனது நிலையில் உறுதியாக உள்ளது.
இதையடுத்து, மேகதாது அணை விவகாரம் குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் மூலம் மத்திய அரசிடம் நேரில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தின் அனைத்துக் கட்சி குழு நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றது.
இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள திமுக, அதிமுக, பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் பிரதமர் மோடியை சந்தித்துப் பேச உள்ளனர். அப்போது, மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை பிரதமரிடம் கொடுக்க உள்ளனர்.