X

மேகதாது அணை விவகாரம்! – கர்நாடகம், தமிழக முதல்வர்களின் கூட்டத்தை கூட்ட மத்திய அரசு முடிவு

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

இத தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மேலும் மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கிய அனுமதிக்கு தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. ஆனால் மத்திய அரசின் அனுமதிக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.

இந்த நிலையில் கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி நேற்று பகல் 1.30 மணிக்கு திடீரென்று டெல்லி புறப்பட்டு சென்றார்.

டெல்லியில் குமாரசாமி நேற்று மாலை மத்திய நீர்ப்பாசனம் மற்றும் தரைவழி போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்காரியை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, கர்நாடக பொதுப்பணித்துறை மந்திரி எச்.டி.ரேவண்ணா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பின்போது, மேகதாது திட்டத்திற்கு தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்து நிதின் கட்காரியிடம் குமாரசாமி தெரிவித்தார். மேலும் மேகதாதுவில் அணை கட்டுவதால், கர்நாடகத்தைவிட தமிழகத்திற்கு தான் அதிக பயன் என்றும் இது குறித்து தமிழகத்திற்கு உண்மை நிலையை எடுத்துக்கூறி இந்த விவகாரத்தில் சுமுக தீர்வு காண வசதியாக தமிழகம் மற்றும் கர்நாடக முதல்-மந்திரிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் குமாரசாமி கோரிக்கை வைத்தார்.

குமாரசாமியின் இந்த கோரிக்கையை ஏற்ற மத்திய மந்திரி நிதின் கட்காரி தமிழகம் மற்றும் கர்நாடகம் ஆகிய இருமாநில முதல்-மந்திரிகள் கூட்டத்தை கூட்ட ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

கர்நாடக அரசு நேற்று மாலையில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

டெல்லியில் இருக்கும் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று இரவு அங்குள்ள கர்நாடக பவனில் தங்கினார்.

இன்று மாலையில் குமாரசாமி பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அப்போது அவர் மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்கும்படி பிரதமரிடம் நேரில் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.

Tags: south news