கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு மத்திய அரசு முதல் கட்ட ஒப்புதலை வழங்கியுள்ளது. ரூ.5,912 கோடியில் இந்த அணை கட்டப்படுகிறது. கர்நாடக அரசு, விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளது.
இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. மேகதாது திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று(வியாழக்கிழமை) நடக்கிறது.
இந்த நிலையில் மேகதாது திட்டம் குறித்து விவாதிக்க முன்னாள் முதல்-மந்திரிகள் மற்றும் முன்னாள் நீர்ப்பாசனத்துறை மந்திரிகளின் ஆலோசனை கூட்டம் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் பெங்களூருவில் இன்று நடக்கிறது. இதில் நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் உள்பட மந்திரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.
மேகதாது திட்ட விவகாரத்தில் தமிழக அரசின் எதிர்ப்பை எவ்வாறு எதிர்கொள்வது, இந்த திட்டத்தை அடுத்தகட்டமாக எப்படி முன்னெடுத்து செல்வது என்பது குறித்து குமாரசாமி ஆலோசனைகளை கேட்டு பெறுகிறார்.
இந்த நிலையில் நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் தலைமையில் ஒரு குழு, நாளை(வெள்ளிக்கிழமை) மேகதாதுவுக்கு சென்று அந்த இடத்தை நேரில் ஆய்வு செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.