நரேந்திர மோடி கடந்த 30-ந் தேதி 2-வது தடவையாக பிரதமராக பதவி ஏற்றார். அவரது மந்திரிசபையில் கர்நாடகத்தை சேர்ந்த சதானந்தகவுடாவும் இடம் பெற்றுள்ளார். அவருக்கு உரம் மற்றும் ரசாயனத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய மந்திரியாக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக அவர் பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அவருக்கு கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.எல்.சி. தலைமையில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பிறகு சதானந்தகவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
என்னை மீண்டும் வெற்றி பெற செய்த கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். மோடி மீது மீண்டும் நம்பிக்கை வைத்து மக்கள் பா.ஜனதாவை ஆதரித்துள்ளனர். மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் நாங்கள் சிறப்பான முறையில் செயல் படுவோம்.
அடுத்த 5 ஆண்டுகளில் பசு பாதுகாப்பு, நாட்டின் வளர்ச்சியை நாங்கள் உறுதி செய்வோம். பலம் வாய்ந்த நாட்டை உருவாக்குவதே எங்களின் குறிக்கோள். மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்போம். கர்நாடக மக்கள் டெல்லி வந்தால், அவர்களின் குறைகளை தெரிவிக்கும் பொருட்டு, தனி அலுவலகம் திறக்க திட்டமிட்டுள்ளோம்.
மேலும் கர்நாடகத்தில் இருந்து 4 மத்திய மந்திரிகள் உள்ளனர். இந்த 4 மந்திரிகளின் அலுவலகங்களிலும், கர்நாடக மக்களின் நலனுக்காக சிறிய அளவில் தனி அலுவலகம் திறக்கப்படும். கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை செய்ய நாங்கள் தயாராக உள்ளோம்.
இதற்காக கர்நாடக அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம். வளர்ச்சி விஷயத்தில் நாங்கள் அரசியல் செய்யமாட்டோம். மத்திய-மாநில அரசுகள் இடையே நல்லுறவு ஏற்பட நாங்கள் முயற்சி செய்வோம்.
எனது துறை, 100 சதவீத விவசாயிகள் மற்றும் மக்களுக்கு தொடர்புடையது ஆகும். விவசாயிகளுக்கு வேண்டிய உரங்களை நாங்கள் விநியோகம் செய்கிறோம். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.80 ஆயிரம் கோடி மானியம் நேரடியாக வழங்குகிறோம்.
நாட்டில் தற்போது 5 ஆயிரம் மலிவு விலை மருந்து கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் மருந்துகள் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. புற்றுநோய் தொடர்பான 50 மருந்துகள் இந்த கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இன்னும் சில மருந்துகளை இதில் சேர்க்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
கர்நாடக காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசை கவிழ்க்க நாங்கள் முயற்சி செய்ய மாட்டோம். ஒருவேளை இந்த அரசு தானாக கவிழ்ந்தால், நாங்கள் அமைதியாக இருக்க முடியாது. புதிய ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிப்போம். பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்றால், குமாரசாமி ராஜினாமா செய்வார் என்று நான் தேர்தலுக்கு முன்பு கூறினேன்.
நான் சொன்னது போலவே, பதவியை ராஜினாமா செய்ய குமாரசாமி முடிவு செய்வார். புறநகர் ரெயில் திட்டத்திற்கு 50 சதவீத நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் இந்த பணிகள் சரியான முறையில் நடைபெறவில்லை. இதற்கு வேகம் கொடுக்க வேண்டியது அவசியம்.
மேகதாதுவில் புதிய அணை கட்ட திட்ட அறிக்கையை தயாரித்து வழங்கும்படி கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கு அனுமதி பெற்று கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் இதுவரை அந்த திட்ட அறிக்கையை மாநில அரசு தாக்கல் செய்யவில்லை. இதில் யாரும் அரசியல் செய்யக்கூடாது.
தாவணகெரேயில் உர குடோன் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் விரைவாக முடிக்கப்படும். மாநிலங்களின் கலாசாரம் மற்றும் மொழிகள் பாதுகாக்கப்படும் என்று பிரதமர் மோடி தெளிவாக கூறியுள்ளார்.
தேசிய கல்வி கொள்கை விஷயத்தில் மத்திய அரசை குறை சொல்வது சரியல்ல. இந்தி மொழி மத்திய அரசால் திணிக்கப்படாது. கிராமத்தில் தங்கும் திட்டத்தை தொடங்குவதாக குமாரசாமி கூறியிருக்கிறார். அதனால் எந்த பயனும் இல்லை என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம்.
இவ்வாறு சதானந்தகவுடா கூறினார்.