X

மேகதாது அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் அனுமதிக்கான கர்நாடகத்தின் விண்ணப்பம் ஆலோசனை பட்டியலில் இருந்து நீக்கம்

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகிறது.

இதற்கிடையே காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க கூடாது என்று தமிழகம் தெரிவித்தது. இதை வலியுறுத்தி சமீபத்தில் பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கக் கூடாது. காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி ஆலோசிக்க கூடாது என்பதை மத்திய நீர் வளத்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்துவதற்காக அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக சட்டசபை கட்சி தலைவர்கள் குழு நேற்று டெல்லி சென்றது.

இக்குழுவினர், மத்திய மந்திரியை சந்தித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்துகிறார்கள். இந்த நிலையில் மேகதாது அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி கோரி கர்நாடகம் அளித்த விண்ணப்பம் பரிசீலனையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 20-ந்தேதி கர்நாடகம் விண்ணப்பம் செய்தது. அந்த விண்ணப்பத்தை பரிசீலனை பட்டியலில் இருந்து மத்திய சுற்றுச்சூழல் துறை நீக்கி உள்ளது.

விரிவான அறிக்கையை ஜல்சக்தி துறை, காவிரி ஆணையம் இறுதி செய்ய வேண்டும். இறுதி செய்தால் மட்டும் சுற்றுச்சூழல் அனுமதிக்கான ஆய்வு எல்லைகளை வழங்க முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேகதாது அணை விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கு இடையே சுமூகமான முடிவு எட்டிய பிறகு விண்ணப்பத்தை பரிசீலிக்க சுற்றுச்சூழல் துறை முடிவு செய்துள்ளது.