கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான பணிகளை விரைவில் துவங்கப் போவதாக அம்மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் கூறிய கருத்துக்கள் தமிழ் நாடு மற்றும் கர்நாடகா அரசியலில் பேசுபொருளாகி இருக்கிறது. டிகே சிவக்குமார் கருத்துக்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில், டிகே சிவக்குமார் கருத்துக்கு தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறிய கருத்துக்களுக்கு ஓபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது, ”கர்நாடக துணை முதலமைச்சருக்கு பதில் அளித்த மாண்புமிகு தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் அவர்கள், மேகதாது பற்றிய முழு விவரத்தை அதிகாரிகள் இன்னும் கர்நாடக துணை முதலமைச்சருக்கு சொல்லியிருக்க மாட்டார்கள் என்று கூறியிருக்கிறார்.
தற்போது கர்நாடக துணை முதலமைச்சராக உள்ள திரு. டி.கே. சிவகுமார் அவர்கள் கர்நாடக சட்டமன்றப் பேரவைக்கு எட்டு முறை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது தெரியாமல், பல ஆண்டு காலம் அமைச்சராக இருந்தவர் என்பது தெரியாமல், ஓராண்டு காலம் நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருந்தவர் என்பது தெரியாமல், மேகதாது பற்றிய முழு விவரத்தை அதிகாரிகள் சொல்லி இருக்கமாட்டார்கள் என்று நீர்வளத் துறை அமைச்சர் சொல்வதில் இருந்து யார் விவரம் அறிந்தவர், யார் விவரம் அறியாதவர் என்பதையும், கர்நாடக மாநில துணை முதலமைச்சர் வேண்டுமென்றே மேகதாது அணைத் திட்டம் குறித்து பேசியிருக்கிறார் என்பதையும் அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.’
கர்நாடக மாநில துணை முதலமைச்சர் அவர்கள் ஏதோ விவரம் தெரியாமல் பேசியிருக்கிறார் என்ற தொனியில் மான்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை நகைப்புக்குரியதாக உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் மேகதாது அணைத் திட்டம் முற்றிலுமாக கைவிடப்பட வேண்டும் என்பதுதான் அனைத்துக் கட்சிகளின் நிலைப்பாடு.
தமிழ்நாட்டில் நடைபெறுவது தி.மு.க. ஆட்சி, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி வர பாடுபட்ட தமிழ்நாடு முதலமைச்சர், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும் என்று பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கர்நாடக அரசிடம் பேசியும், காங்கிரஸ் மேலிடத்தில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி கர்நாடக அரசுக்கு தேவையான அழுத்தத்தைக் கொடுத்தும், சட்டத்திற்கு புறம்பான மேகதாது அணை திட்டத்தை கர்நாடக அரசு கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இசையலில்லை என்றால், காங்கிரஸ் கட்சியுடனான உறவை முறித்துக் கொள்வோம் என்று எச்சரிக்கை விடுத்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.