Tamilசெய்திகள்

மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது சட்டவிரோதமானது – கர்நாடக முதலமைச்சர்

 

காவிரி ஆற்றின் குறுக்கே தமிழக எல்லை அருகே மேகதாது என்ற இடத்தில் மிக பிரமாண்டமான அணையை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அணை கட்டும் பணியை கர்நாடக அரசு தொடங்கி உள்ளது. இதற்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு மற்றும் காவிரி நடுவர் மன்றத்தின் அறிவுறுத்தல்களை மீறி கர்நாடக அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

இதற்கிடையே, மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்தும் வகையில் தமிழக சட்டசபையில் நேற்று தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், மேகதாது திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது சட்டவிரோதமானது என கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பசவராஜ் பொம்மை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், மேகதாது திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்
கொள்கிறேன். இது சட்டவிரோதமானது. பிற மாநில உரிமைகளில் தலையிடுவது, நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என பதிவிட்டுள்ளார்.