Tamilவிளையாட்டு

மெல்போர்ன் மைதனாத்தில் இன்று வார்னேவுக்கு இறுதி மரியாதை

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே, விடுமுறையை கழிக்க தாய்லாந்து சென்ற போது கடந்த 4-ந்தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து அவரது உடல் தனியார் விமானத்தில் ஆஸ்திரேலியா கொண்டு செல்லப்பட்டது. அவரது குடும்பத்தினர் தனிப்பட்ட முறையில் இறுதிசடங்குகளை செய்தனர்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அரசு சார்பில் அவருக்கு இன்று மெல்போர்ன் மைதானத்தில் பிரமாண்டமான இறுதி மரியாதை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் தான் வார்னே தனது 700-வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஏற்கனவே இலவசமாக 50 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. தேவை அதிகமாக இருந்ததால் மேலும் 15 ஆயிரம் டிக்கெட் ஒதுக்கப்பட்டது. ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர்கள், வார்னே குடும்பத்தினர் உள்பட பல்வேறு தரப்பினர் கலந்து கொள்கிறார்கள். இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கி 2 மணி நேரம் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடக்கிறது.

வார்னேவுக்கு புகழஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கரின் வீடியோ பதிவு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. ‘மற்ற சுழற்பந்து வீச்சாளர்களிடம் இருந்து வார்னே மிகவும் வித்தியாசமானவர். விக்கெட் வீழ்த்தினாலும், வீழ்த்தாவிட்டாலும் ஒவ்வொரு பந்து வீசும் போது, கடுமையான போட்டியாளராகவே இருப்பார். அவரை மிகவும் தவற விடுகிறேன். கடந்த ஐ.பி.எல். போட்டிக்கு பிறகு லண்டன் சென்ற போது அவரை சந்தித்தேன். இருவரும் கோல்ப் விளையாடினோம். ரொம்ப ஜாலியாக, நகைச்சுவையாக பேசினார். அவர் பக்கத்தில் இருக்கும் போது சலிப்பே இருக்காது. இது தான் அவருடன் எனது கடைசி சந்திப்பு’ என்று தெண்டுல்கர் குறிப்பிட்டார்.