மெரீனாவில் கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைப்பது குறித்து மத்திய சுற்றுச்சூழல் மதிப்பீட்டு நிபுணர் குழு இன்று ஆலோசனை
மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கரில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. உதயசூரியன் வடிவத்தில் அமைக்கப்படும் நினைவிடத்தின் முகப்பில் கருணாநிதியின் வாழ்க்கை, இலக்கிய சிந்தனைகளை விளக்கும் வகையில் நவீன ஒளி படங்களுடன் கூடிய வளாகம் அமைக்கப்படுகிறது.
இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் வேளையில், மற்றொருபுறம் கருணாநிதியின் இலக்கிய பங்களிப்பை நினைவு கூறும் வகையில் மெரினா கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு (42 மீட்டர்) பிரமாண்ட பேனா நினைவு சின்னம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இது கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் அமைய இருக்கிறது. அங்கு ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இதனை பொதுமக்கள் வந்து பார்த்து செல்லும் வகையில் இரும்பு பாலம் மற்றும் பேனா நினைவு சின்னத்தை பார்வையிடும் வகையில் நடைபாதை அமைக்கவும் திட்டம் தீட்டி உள்ளனர்.
இந்த பிரம்மாண்ட நினைவு சின்னத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் முன்மொழிவு பெறப்பட்டுவிட்டது. பொதுமக்க ளிடமும் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. மேலும், கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் இந்த திட்ட அறிக்கையை விரிவாக ஆய்வு செய்து அனுமதி வழங்கிவிட்டது.
இதன் அடுத்தகட்டமாக மத்திய அரசின் அனுமதிக்காக பேனா நினைவு சின்னம் திட்டத்தை தமிழக அரசு அனுப்பி வைத்து உள்ளது. இதற்கிடையே தமிழ்நாடு கடற்கரை மேலாண்மை மண்டல ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று தமிழக பொதுப்பணித்துறை சார்பில் பேனா நினைவு சின்னம் அமைக்க ஒப்புதல் வழங்குமாறு மத்திய அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழுவுக்கு விரிவாக கடிதம் எழுதி இருந்தது. இந்நிலையில் இன்று மத்திய அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு நிபுணர் குழுவின் 325-வது ஆலோசனை கூட்டம் இன்று புது டெல்லியில் நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு குழுவின் தலைவர் தீபக் அருண் அப்டே தலைமை தாங்குகிறார்.
இந்த கூட்டத்தில் தான் இன்று மெரீனா கடலில் கலைஞருக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பான கடிதம் பட்டியலிடப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று நிபுணர்கள் குழுவினர் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக காணொலியில் ஆலோசனை மேற்கொள்கின்றனர்.
இந்த ஆலோசனையில் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். ஏற்கனவே தமிழக பொதுப்பணித்துறை அளித்துள்ள கடிதத்தில் பேனா நினைவு சின்னம் அமைய உள்ள இடத்தில் கடல் ஆமைகளோ, புற்களோ இல்லை என்றும், இதனால் மீனவர்களுக்கோ, கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து நிபுணர் குழு தீவிரமாக ஆலோசனை மேற்கொள்கிறது. இந்த குழுவில் பல்வேறு நிபுணர்களும் பங்கேற்று ஆலோசிக்கின்றனர். ஆலோசனையில் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக இறுதி முடிவை எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நிபுணர் குழு ஆலோசனை முடிந்ததும், அவர்கள் இது தொடர்பான விரிவான அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்க உள்ளது. அதன்பின்னரே பேனா நினைவு சின்னம் அமைக்க அனுமதி கிடைக்குமா? என்பது தெரியவரும். இருப்பினும் மத்திய அரசு விரைவில் இதற்கு அனுமதி வழங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே சென்னை பெருநகர வளர்ச்சி குழுவிடம் (சி.எம்.டி.ஏ.) பேனா நினைவு சின்னத்தின் வரை படத்தை சமர்ப்பித்து அனுமதி பெறவும் அடுத்த கட்டமாக ஏற்பாடுகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.