மெரினா கடற்கரை அருகே மீன் கடைகள்! – அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள்
ஆழ்கடலில் மீன்பிடிக்க மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் என்ற புதிய விதிமுறையை எதிர்த்து மீனவர்கள் நல அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் அடங்கிய முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, உலக புகழ் பெற்ற மெரினா கடற்கரை குப்பை கூளங்களாக காட்சி அளிக்கிறது. இதை சுத்தமாக வைத்திருக்க மீனவர்களும் உதவி செய்யவேண்டும். அவர்களை மீனவர் அமைப்புகள் ஊக்கப்படுத்த வேண்டும்’ என்று கருத்து தெரிவித்தனர்.
மற்றொரு வழக்கின் விசாரணையின்போது, மெரினா கடற்கரையை சுத்தமாக வைக்க மாநகராட்சி ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், பீட்டர் ராயன் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் அருகே சாலைகளை ஆக்கிரமித்து மீன் கடைகள் பலர் வைத்துள்ளதற்கு’ நீதிபதிகள் கடும் அதிருப்தியை தெரிவித்தனர்.
மெரினா கடற்கரையை சுத்தம் செய்வதற்கு என்று ஒதுக்கப்படும் நிதியை கொண்டு மீனவர்களுக்கு மீன் சந்தை அமைத்துக் கொடுக்காதது ஏன்? மெரினா கடற்கரையில் மீன் கடை வைத்துள்ளவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கப்பட்டுள்ளதா? இதுவரை எத்தனை மீனவர்களுக்கு மாற்று இடம் கொடுக்கப்பட்டுள்ளது? என்றும் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி கேட்டனர். இதற்கு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.
பின்னர், ‘மெரினா கடற்கரையை தூய்மையாக பராமரிக்கும் வகையில் திட்டம் ஒன்றை மாநகராட்சி நிர்வாகம் வருகிற 17-ந்தேதிக்குள் உருவாக்க வேண்டும். அந்த திட்டத்தை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். பின்னர், இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம், மாநகராட்சி ஆணையர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.